நாஷிக்: மகாராஷ்ட்ரா மாநிலம் நாஷிக்கில், கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி, இந்திரா நகர் பகுதியில் சாலையோர புதரில் சடலம் ஒன்று கிடந்தது. அதன் அருகே இருசக்கர வாகனமும் கிடந்ததால், விபத்து என்று வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சடலமாக மீட்கப்பட்டவர் அசோக் ரமேஷ் பலேராவ்(46) என்று தெரியவந்தது. இந்த வழக்கில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில், உயிரிழந்த அசோக்கின் சகோதரர் காவல்நிலையத்துக்கு சென்று, இது விபத்து அல்ல, கொலை என்றும், இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. இன்சூரன்ஸ் பணத்திற்காக அசோக் கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், "அசோக் பலேராவ் நான்கு கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் செய்துள்ளார். இதை அறிந்த அவரது நண்பர்கள் சிலர், அடையாளம் தெரியாத ஒருவரை கொன்று, அவர்தான் அசோக் என நிரூபித்து காப்பீட்டுத் தொகையை பெற முடிவு செய்துள்ளனர். அதற்காக ரஜினி என்ற பெண்மணியை அசோக்கின் மனைவி என அரசிதழில் போலியாக பதிவு செய்துள்ளனர். ஆனால், அசோக்கின் வெளியூர் பயணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மூன்று ஆண்டுகளாகியும் அவர்களது திட்டம் நிறைவேறவில்லை.
இதையடுத்து அடையாளம் தெரியாத நபரை கொல்வதற்கு பதில், அசோக்கையே கொல்ல சதித்திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி கடந்த 2019ஆம் ஆண்டு அசோக்கை கொலை செய்துவிட்டு, விபத்து போல சித்தரித்துள்ளனர். இதையடுத்து திட்டமிட்டபடி காப்பீட்டுத் தொகை போலி மனைவி ரஜினியின் வங்கிக் கணக்கில் டெபாசிட் ஆனது. அந்த பெண்மணி, மங்கேஷ் சவ்கர் உள்ளிட்ட ஐந்து நபர்களுக்கு பணத்தை பிரித்து கொடுத்துள்ளார். இந்த கும்பலில் ஒருவருக்கு மட்டும் குறைவாக பணம் கிடைத்துள்ளது. அந்த நபர்தான் அசோக்கின் சகோதரரிடம் இந்த சதித்திட்டம் குறித்து தெரிவித்துள்ளார். அதன் பிறகுதான் அனைத்தும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஒரு பெண்மணி உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பெங்களூருவில் கருக்கலைப்பு மாத்திரை விழுங்கிய பெண் உயிரிழப்பு