பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த 2019ஆம் ஆண்டு, 17 வயது சிறுமி ஒருவர், 23 வயது இளைஞரை காதலித்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ள சென்றுள்ளனர்.
அப்போது சிறுமியைக் காணவில்லை என சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இளைஞரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். 18 மாதங்கள் கழித்து இளைஞர் ஜாமீனில் வெளியே வந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் 2020ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஒரு வருடத்திற்குப் பிறகு குழந்தை ஒன்றும் பிறந்தது.
இந்த நிலையில், இதுதொடர்பான வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர் இருவரும் விருப்பப்படி திருமணம் செய்துகொண்டதால், வழக்கை முடித்து வைப்பதே சரி என்று கூறியது. பின்னர், இளைஞருக்கு எதிரான போக்சோ மற்றும் பலாத்கார குற்றச்சாட்டுகளை ரத்து செய்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.