திருவனந்தபுரம்: ஏப்ரல் 6ஆம் தேதி கேரளாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில், தேர்தலின்போது புகையத் தொடங்கிய ஹவாலா வழக்கு, தொடர்ந்து பரபரப்பைக் கிளப்பி வருகிறது.
இந்நிலையில் ஹவாலா வழக்கு குறித்த விசாரணையில் நேரில் ஆஜராகுமாறு கேரள மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரனுக்கு காவல் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதன்படி, வரும் ஜூலை 6ஆம் தேதி காலை 10 மணிக்கு சுரேந்திரனை திரிச்சூர் போலீஸ் கிளப்பில் நேரில் ஆஜராகுமாறு தெரிவித்துள்ள காவல் துறையினர், அவரது ஓட்டுநரிடமும் உதவியாளரிடமும் முன்னதாக இது குறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
நெடுஞ்சாலை கொள்ளை
நில பரிவர்த்தனைக்காக முன்கூட்டியே பணம் செலுத்துவதற்காக தனது வாகனத்தில் கொண்டு சென்ற 25 லட்சம் ரூபாய் பணம் திருச்சூர்- கோடக்கரா நெடுஞ்சாலையில் தன்னிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டதாக முன்னதாக ஒருவர் புகார் தெரிவித்திருந்தார்.
இந்தப் பணம் தேர்தலுக்கு விநியோகிக்க பாஜக வைத்திருந்த ஹவாலா பணத்தின் ஒரு பகுதி எனக் கூறப்பட்டு, கொள்ளை சம்பவத்துடன் கேரள பாஜக தொடர்புபடுத்தப்பட்டு வந்தது.
பழங்குடியினத் தலைவருக்கு வழங்கப்பட்ட பணம்
குறிப்பாக பழங்குடியின ஜனாதிபத்திய ராஷ்டிரிய கட்சியின் தலைவர் சி.கே.ஜானுவுக்கு, அவர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு திரும்பியதற்காக 10 லட்சம் ரூபாய் வழக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக அக்கட்சியின் பொருளாளர் பிரசீதா அஜிகோட் கட்சி நிதிநிலை குறித்த தகவல்களை வெளியிட்டு இதனை உறுதி செய்த நிலையில், சுரேந்திரன், ஜானு இருவரும் உடனடியாக மறுப்பு தெரிவித்து பிரசீதா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அச்சுறுத்தினர்.
ஆளும் கட்சி குற்றச்சாட்டு
இந்நிலையில், ஆளும் இடது ஜனநாயக முன்னணியின் (எல்டிஎஃப்) கட்சித் தலைவர் ஏ. விஜயராகவன், இந்தப் பணம் பாஜக தேர்தல் காலத்தில் கொடுப்பதற்கு பயன்படுத்திய ’ஹவாலா’ பணமே என்றும், கட்சி வேட்பாளர்களுக்காக மட்டுமே இப்பணம் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வளவு பெரிய ’ஹவாலா’கூட்டத்திற்கு பாஜக தான் பொறுப்பு என்றும் மாநிலத்தில் இவ்வளவு பெரிய ஹவாலா பணப் பரிமாற்றம் நடைபெறுவது இதுவே முதல் முறை என்றும் கூறியுள்ளார்.
பாஜக தலைவர்கள் விசாரணை
தேர்தலின் போது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஹவாலா பண விவகாரத்தில், 3.5 கோடி ரூபாய் வரை மோசடி நடைபெற்றதாகவும், இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் பாஜகவின் மூத்த மாநிலத் தலைவர்கள் இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
கேரள பாஜகவிற்கு கரும்புள்ளியாக அமைந்துள்ள இந்த வழக்கில், தற்போது கட்சியின் பல்வேறு கீழ்மட்ட, நடுத்தர தலைவர்களிடமும் காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது.
இதையும் படிங்க: முதலமைச்சர் இரவோடு இரவாக ராஜினாமா- இன்று எம்எல்ஏக்கள் கூட்டம்!