டெல்லி: மத்தியில் ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதா கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும் வார்த்தைப் போர் நடந்து வரும் நிலையில், ஆகஸ்ட் 1ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தனது கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், தனிப்பட்ட விருதை வழங்க உள்ள நிகழ்வு, காங்கிரஸ் கட்சியை கவலையடைய வைத்து உள்ளது.
சரத் பவார், பாஜக மீது கோபப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. பாரதிய ஜனதா கட்சி சமீபத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவை ஏற்படுத்தி இருந்தது, கடந்த ஆண்டு ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட மகா விகாஸ் அகாதி கூட்டணியில் சரத் பவார் முக்கிய உறுப்பினராக பதவி வகித்து உள்ளார். 2024ஆம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசை அகற்ற எதிர்க்கட்சிகள் கூடி உருவாக்கி உள்ள இந்திய தேசிய வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டணியில் (INDIA), சரத் பவார் முக்கிய நிர்வாகியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடிக்கு விருது வழங்கும் அறக்கட்டளையின் தலைவர் தீபக் திலக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திலக் ஸ்மாரக் மந்திர் அறக்கட்டளை (ஹிந்து ஸ்வராஜ் சங்கம்) பிரதமர் நரேந்திர மோடிக்கு லோகமான்ய திலக் தேசிய விருதை, லோகமான்ய திலகரின் 103வது ஆண்டு நினைவு நாளான, ஆகஸ்ட் 1ஆம் தேதி வழங்க உள்ளதாக” தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு உள்ளார். நினைவுச்சின்னம் மற்றும் சான்றிதழைக் கொண்டுள்ளதாக உள்ள இந்த விருது, பிரதமர் மோடியின் "உச்ச தலைமைத்துவத்தையும் குடிமக்களிடையே தேசபக்தி உணர்வை எழுப்பியதற்காகவும்" வழங்கப்பட உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சராக இருக்கும் அஜித் பவாருக்கும், இந்த நிகழ்ச்சியில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இந்திய தேசிய வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டணியின் (INDIA) மூன்றாவது கூட்டம், சிவசேனா UBT அணியின் தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இந்த விருது வழங்கும் விழா, புனே நகரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது, “ சரத் பவார் பற்றி நாங்கள் முற்றிலும் கவலைப்படுகிறோம். அவர் மனதில் என்ன நினைக்கிறார் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. சரத் பவார், பாரதிய ஜனதா கட்சியிடம் சரணடைந்தாரா அல்லது அவருக்கு வேறு ஏதாவது அழுத்தம் உள்ளதா என்பது எங்களுக்குத் தெரியவில்லை? இந்த விருது வழங்கும் நிகழ்வு கட்சிக்குள் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக'' அவர் குறிப்பிட்டு உள்ளார்.
மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் செயல் தலைவர் முகமது ஆரிப் நசீம் கான், ETV Bharat ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ''பிரதமர் மோடியை கவுரவிக்கும் வகையிலான புனே விருது வழங்கும் விழாவில் சரத் பவார் முன்னிலை வகிக்கவில்லை. இது ஒரு தனியார் அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு தனிப்பட்ட விழா. மேலும் இதுகுறித்து, நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. ஆனால், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை இது சிறிதும் பாதிக்கவில்லை'' என்று குறிப்பிட்டு உள்ளார்.
புனேவில் உள்ள இந்த தனியார் அறக்கட்டளை, பல ஆண்டுகளாக பழைய கட்சிக்கு நெருக்கமானவர்களால் நடத்தப்பட்டு வருவதாகவும், முன்னாள் மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூட அறங்காவலர்களில் ஒருவராக இருப்பதாக, காங்கிரஸ் பற்றி நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. ஆரம்பத்தில் அறக்கட்டளையின் அறங்காவலர்கள் பிரதமருக்கு அழைப்பிதழ் அனுப்பிய நிலையில், அவர் இதில் பங்கேற்க தயக்கம் காட்டியதாகவும், பின்னர் அறங்காவலர் குழுவில் சரத் பவார் இணைக்கப்பட்ட நிலையில், அவர் விருதை ஏற்றுக்கொள்ள பிரதமரை சமாதானப்படுத்தியதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
''பிரதமராக இருப்பவர்கள் எவரும் தனியார் அறக்கட்டளையின் விருதை ஏற்றுக்கொண்டதை நான் பார்த்ததில்லை. இது கேள்விப்படாத ஒன்று. இந்த விருதை பிரதமர் ஏற்றுக்கொண்டதன் நோக்கம் என்ன? அவர் விளம்பரத்திற்காக ஆசைப்படுகிறாரா? லோக்சபா தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா தோல்வி குறித்து அவர் மிகவும் பயப்படுகிறாரா? என்று மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதலமைச்சர் பிருத்விராஜ் சவான், Etv Bharat ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து உள்ளார்.
புனே லோக்சபா இடைத்தேர்தல் நிலுவையில் உள்ள நிலையில், தனியார் அறக்கட்டளையில் இருந்து யாராவது பாஜக டிக்கெட் பெற முயற்சிக்கிறார்களா என்று காங்கிரஸ் கட்சி சந்தேகம் தெரிவித்து உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் கிரிஷ் பாபட் கடந்த மே 29ஆம் தேதி உயிரிழந்த நிலையில், அவரது , நாடாளுமன்றத் தொகுதி காலியாக உள்ளது. மக்களவைத் தேர்தல் இன்னும் ஓராண்டுக்குள் நடைபெற உள்ள நிலையில், இந்த இடைத்தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் இன்னும் அழைப்பு விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மணிப்பூர் விவகாரம் : எதிர்க்கட்சிகள் தொடர் அமளி... நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!