ஹரியானா: ஹரியானா மாநிலம், சிர்சா பகுதியில் வயலில் பசு ஒன்று புல் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென வெடிசப்தம் கேட்டுள்ளது. உடனடியாக பதறியடித்து ஓடிய பசுவின் உரிமையாளர் சத்பால் சிங், பசுவின் வாயில் வெடிமருந்து வெடித்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வெடிமருந்து வெடித்து பசுவின் வாயில் ரத்தம் கொட்டியது. இதையடுத்து சத்பால் ஆம்புலன்சை அழைத்து, பசுவை மருத்துவமனைக்கு ஏற்றிச் சென்றார். ஆனால் வழியிலேயே பசு இறந்துவிட்டது.
இதுதொடர்பாக சத்பால் போலீசில் புகார் அளித்தார். தனது பசுவுக்கு திட்டமிட்டு வெடிமருந்து வைக்கப்பட்டதாகவும், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்திய போலீசார், வெடிமருந்து மாதிரிகளையும் சேகரித்தனர். பிறகு, மிருக வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் கேரளாவில் கடந்த 2020ஆம் ஆண்டு, கர்ப்பிணி யானை ஒன்று வெடிமருந்து கலந்த பழத்தை சாப்பிட்டதால் துடிதுடித்து இறந்தது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: ஒரு ரூபாய்க்கு 10 சானிட்டரி நாப்கின்கள் - மகாராஷ்டிரா அரசின் மாஸ்டர் பிளான்!