நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி விநியோகம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனும் அவரது மனைவியும் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை இன்று செலுத்திக்கொண்டனர்.
டெல்லியில் உள்ள இதயம் மற்றும் நுரையீரல் மையத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முதல் டோஸ் போட்டுக்கொண்ட பிறகு, எங்கள் இருவருக்கும் எவ்விதமான பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு இந்திய தடுப்பூசிகளும் பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் திகழ்கின்றன.
ஆனால், தடுப்பூசி குறித்து பலர் சந்தேகம் எழுப்புகின்றனர். வாட்ஸ்அப்பில் வருவதை நம்ப வேண்டாம் என அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் சிலருக்கு கரோனா பரவல் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் மருத்துவமனையிலோ அல்லது தீவிர சிகிச்சைப் பிரிவிலோ அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு" என்றார்.