ஹரித்வார் : உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் (Haridwar hate speech) நடந்த மதம் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட ஜிதேந்திர நாராயண் தியாகி என்ற வாசிம் ரிக்வி, இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசியதாக குற்றஞ்சாட்டு எழுந்தது.
இவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153-A (இரு தரப்பினர் இடையே மத ரீதியிலான பிளவை ஏற்படுத்துதல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவலர்கள் வழக்குப்பதிவு செய்தனர். இவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பிணை கோரி வாசிம் ரிக்வி தாக்கல் செய்த மனு, ஹரித்வார் தலைமை நீதித்துறை நடுவர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த தலைமை நீதித்துறை நடுவர் முகேஷ் சந்திர ஆர்யா, வாசிம் ரிக்விக்கு பிணை வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டார்.
வாசிம் ரிக்வி இதற்கு முன்பு உத்தரப் பிரதேச ஷியா வக்ஃப் வாரியத்தின் தலைவராக இருந்தார். மேலும், ஹரித்வார் வெறுப்பு பேச்சு வழக்கில் கைது செய்யப்பட்ட முதல் நபரும் இவராவார்.
இந்த நிகழ்வில் உரை நிகழ்த்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரகாண்ட் அரசுக்கு பல்வேறு தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டன.
இந்நிலையில் உச்ச நீதிமன்றமும் சம்பந்தப்பட்ட நபர்கனள கைது செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து, வாசிம் ரிக்வி மற்றும் நரசிங்கானந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தவிர நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Haridwar hate speech: உத்தரகாண்டில் மதத் தலைவர் கைது!