அகமதாபாத்: பாஜக ஆட்சிக்கு எதிராக பட்டேல் சமூக மக்களின் குரலாக ஒலித்தவர் ஹர்திக் பட்டேல். இளம் தலைவரான இவர் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு எதிராக இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினார்.
இந்த நிலையில் தற்போது அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் முன்னோட்டமாக ஹர்திக் பட்டேல், தனது ட்விட்டர் சமூக வலைதள பக்கத்தில் இருந்து, குஜராத் காங்கிரஸ் செயல்தலைவர் என்பதை நீக்கியுள்ளார்.
இது அம்மாநிலத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. குஜராத்தில் ஆம் ஆத்மி மிகப்பெரிய கட்சியாக வளர்ந்துவருகிறது. அங்கு அண்மையில் சென்ற அரவிந்த் கெஜ்ரிவால், “மாநிலத்தின் கல்வித் தரம் உயர்த்தப்படும், அவ்வாறு நடைபெறவில்லையெனில் எங்கள் முதலமைச்சரை மக்கள் திரும்ப பெற்றுக்கொள்ளலாம்” என்று வாக்குறுதி அளித்தார்.
மேலும் அரவிந்த் கெஜ்ரிவால், பட்டேல் சமூக வாக்குகளை கவர பல்வேறு திட்டங்களை அமல்படுத்திவருகிறார். இந்த நிலையில் குஜராத் காங்கிரஸ் செயல் தலைவர் என்ற பொறுப்பை ட்விட்டரில் இருந்து நீக்கியுள்ளார் ஹர்திக் பட்டேல்.
இது அரசியல் ரீதியாக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில் ஹர்திக் பட்டேல் தனிக்கட்சி தொடங்குவாரா? அல்லது ஆம் ஆத்மியில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பும் தேசிய அளவில் ஏற்பட்டுள்ளது. குஜராத் சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க: 'பிகாரில் ஆட்சி மாற்றம் தேவை'- ஹர்திக் பட்டேல்!