பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரு, பெலகாவி மற்றும் மைசூரு என பல்வேறு நகரங்களில் உள்ள பெரும்பாலான கோவில்களில் இன்று (மே9) அதிகாலை 5 மணிக்கெல்லாம் ஹனுமன் சாலிஜா, சுப்ரபாதம், ஓம்காரம் உள்ளிட்ட பக்தி பாடல்கள் ஒலித்தன. பல்வேறு கோவில்களில் ஸ்ரீ ராம சேனா தொண்டர்கள் நேரடியாக சென்று ஹனுமன் சாலிஸா உள்ளிட்ட பல்வேறு பக்தி பாடல்களை பாடினார்கள்.
பிரமோத் முத்தாலிக்: ஸ்ரீ ராம சேனா இயக்கத்தின் தலைவர் பிரமோத் முத்தாலிக் கர்நாடகாவில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்துக் கோவில்களில் திங்கள்கிழமை (மே9) அதிகாலை 9 மணிக்கெல்லாம் ஹனுமன் சாலிஸா ஒலிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
இந்த அழைப்பை ஏற்று அதிகாலை 5 மணிக்கெல்லாம் 1,000க்கும் மேற்பட்ட இந்துக் கோவில்களில் ஹனுமன் சாலிஸா உள்ளிட்ட பக்தி பாடல்கள் ஒலிக்கப்பெற்றுள்ளன. முன்னதாக, மசூதிகளில் உள்ள கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை அகற்றுவதில் கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
ஹனுமன் சாலிஸா பாடல்கள்: இந்த ஒலிபெருக்கிகளை அகற்ற மாநில அரசு உத்தரவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரமோத் முத்தாலிக் கோவில்களில் ஹனுமன் சாலிஸா, சுப்ரபாதம், ஓம்காரம் உள்ளிட்ட பக்தி பாடல்கள் ஒலிபரப்பப்படும் என்றார்.
அதன்படி கோவில்களில் காலை 5 மணிக்கெல்லாம் பக்தி பாடல்கள் ஒலிபரப்பப்பட்டுள்ளன. இதற்கிடையில், பெலகாவி மாவட்டத்தில் உள்ள கோவில் ஒன்றில் ஸ்ரீ ராம சேனா தொண்டர்கள் அதிகாலை 5 மணிக்கெல்லாம் ஹனுமன் சாலிஸா ஓதினார்கள். இந்தப் பரப்புரை பெலகாவியின் பல்வேறு இடங்கள், விஜயாநகர், விஜய்பூர், மைசூரு உள்ளிட்ட இடங்களில் தீவிரமாக நடந்தது.
கைது: இதையடுத்து அந்தப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பல்வேறு இடங்களில் இந்துத்துவ தலைவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அப்போது மசூதிகளில் உள்ள கூம்பு ஒலிபெருக்கியை அகற்ற வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர்.

இந்தப் பிரச்சினைகளுக்கு மத்தியில் முன்னாள் அமைச்சர் யூடி காதர் மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை-ஐ சந்தித்துப் பேசினார். அப்போது முதலமைச்சர், மசூதிகள் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் ஆணையை பின்பற்ற வேண்டும் என்றும் மத நல்லிணக்கத்துக்கு எதிராக நடப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
முதலமைச்சருடன் யூடி காதர் சந்திப்பு: பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மாநிலத்தில் 99 சதவீத மக்கள் மத நல்லிணக்கத்தோடு வாழ்கின்றனர். 1 சதவீதம் பேர் இந்த நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் வகையில் நடந்துகொள்கின்றனர்” என்றார்.
மேலும், “ஸ்ரீ ராம சேனாவுக்கு எதிராக சட்ட ரீதியாக போராட்டம் கூட நடத்தப்போவதில்லை” என்று தெரிவித்தார். இதற்கிடையில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து போலீஸ் கமிஷனர் கமல் பந்த், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை-ஐ சந்தித்து விளக்கினார்.
இதையும் படிங்க : மசூதி ஒலிபெருக்கி சப்தமாக ஒலிக்கும் வரை ஹனுமன் சாலிஸா பாடப்படும்- ராஜ் தாக்கரே!