ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் அல்வார் பகுதியில், கடந்த வாரம் டிராக்டரை திருடியதாக ஏற்பட்ட சந்தேகத்தில், 45 வயதான சிரஞ்சிலால் சைனி என்பவரை, குறிப்பிட்ட சமூகத்தினர் அடித்துக் கொலை செய்தனர். இந்த கும்பல் கொலை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், முன்னாள் ராம்கர் எம்எல்ஏவும், பாஜக மூத்த தலைவருமான கியான்தேவ் அஹுஜா, உயிரிழந்த சிரஞ்சிலால் சைனியின் குடும்பத்தினரை சந்திக்கச் சென்றார். குடும்ப உறுப்பினர்களிடம் பேசுகையில், "பசுவதை, பசு கடத்தல் போன்றவற்றில் ஈடுபடுவோரை சும்மா விடக்கூடாது. இதுபோன்ற செயலில் ஈடுபட்ட ஐந்து பேரை கொன்றிருக்கிறோம். ஆனால் முதல்முறையாக தற்போது நமது ஆளை அவர்கள் கொலை செய்திருக்கிறார்கள். அதனால், நமது தொண்டர்களுக்கு நான் முழு சுதந்திரம் தருகிறேன், உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை வந்தால் நான் காப்பாற்றுகிறேன்" என்று கூறினார்.
அஹுஜா பேசிய இந்த வீடியோவை ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், பாஜகவின் மதவெறிக்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும் என்றும், பாஜகவின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்றும் கோவிந்த் சிங் பதிவிட்டுள்ளார். இரு பிரிவினரிடையே மோதலை தூண்டும் வகையிலான அஹுஜாவின் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து அஹுஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.