குவாலியர் : மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் பிரிஜேஷ் அடல். கடந்த 2005 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெடி விபத்தில் பிரிஜேஷ் அடலின் இரு முன் கைகள் மற்றும் ஒரு கண் பார்வை பறி போனது. தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனிடையே பிரிஜேஷின் தந்தையும் காலமானார். குடும்பப் பொறுப்பு, தம்பி, தங்கையின் கல்வி என நாலாபுறம் கிடைத்த நெருக்கடிகளால் துவண்டு போன பிரிஜேஷ், எந்த ஊனத்தால் வாழ்க்கையை இழந்தாரோ அதே ஊனத்தை தனக்கு சாதகமாக மாற்றி உயரத் தொடங்கினார். தனது முழு வாழ்க்கையையும் சிந்தனை, ஆர்வம் மற்றும் தைரியத்திற்கு ஒதுக்கி, தற்போது மத்திய பிரதேச பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளார்.
தனது விடா முயற்சியால் சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வில் முதல் கட்டத்தை எட்டி உள்ளார் பிரிஜேஷ். இரு முன் கைகளையும் இழந்த பிரிஜேஷ் தன்னப்பிக்கையை கொண்டு சாதித்து காட்டி உள்ளார். இரு முன் கைகள் இல்லாமல் போனாலும் பிரிஜேஷ் எழுதுகிறார், தன் தாய்க்கு வீட்டு வேலைகளை செய்து கொடுக்கிறார், அக்கம் பக்கத்து மாணவர்களுக்கு டியூசன் எடுப்பது, கிரிக்கெட் விளையாடுவது, சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனம் ஓட்டுவது என பல் துறையில் பிரிஜேஷ் கலக்குகிறார்.
ஊனத்தையே உதாசினப்படுத்தும் பிரிஜேஷ் இனி செய்ய இயலாத வேலைகள் ஏதும் உள்ளதா என்ற அளவுக்கு அவரது உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் கூறுகின்றனர். சாதாரண மனிதர்களை போன்று செல்போன், லேப்டாப் உள்ளிட்ட மின் பொருள்களை சர்வ சாதாரணமாக பிரிஜேஷ் கையாளுகிறார்.
சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று சிறந்த அதிகாரியாக இருக்க வேண்டும் என்பதே தனது லட்சியம் என பிரிஜேஷ் தெரிவித்து உள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கு முன் உதாரணமாக இருக்கும் பிரிஜேஷ் அடலுக்கு பல்வேறு தரப்பினரும் ஊக்கமும் பாராட்டும் அளித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : பிரதமர் மோடி முதுமலை வருகை - வளர்ப்பு யானைகள் முகாமை பார்வையிடுகிறார்!