குவாலியர்(மத்தியப்பிரதேசம்): மத்தியப்பிரதேச மாநிலம், தாடியா சுற்றுவட்டாரப்பகுதியைச் சார்ந்த ஒருவர், கடந்த ஆண்டு மார்ச் 8ஆம் தேதி, அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில், தனது மைனர் மகளை சோனு பரிஹார் என்ற இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதன் காரணமாக சிறுமி கருவுற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். சிறுமியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு கருக்கலைப்பு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட இளைஞரை கைது செய்யவும், கருக்கலைப்பு செய்ய அனுமதி வழங்கியும் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், போலீசார் இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறுமிக்கு கருக்கலைப்பும் செய்யப்பட்டது. அப்போது, கைது செய்யப்பட்ட சோனு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யவில்லை என்ற அதிர்ச்சித்தகவல் தெரியவந்தது. இதையடுத்து டிஎன்ஏ சோதனை நடத்தப்பட்டதில், சோனு பாலியல் வன்கொடுமை செய்யவில்லை என்பது உறுதியானது.
இதனிடையே ஜாமீன் கோரி சோனு உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார். அவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், இதுதொடர்பாக சிறுமியிடம் விசாரணை நடத்த தாடியா போலீசாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்தன.
சோனு தன்னை பாலியல் வன்கொடுமை செய்யவில்லை என்றும், தான் மைனர் இல்லை என்றும்; அந்தப் பெண் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து வழக்கின் தீவிரத்தைக் கருதி, மீண்டும் விசாரணை நடத்த தாடியா காவல் கண்காணிப்பாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் இதில் சம்மந்தப்பட்ட பெண், அவரது தந்தை, உறவினர் மூவரும் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. ஆனால், அவர்கள் ஆஜராகவில்லை. இதன் எதிரொலியாக மூவருக்கும் எதிராக பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார், உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை மீண்டும் விசாரித்ததில், அந்தப்பெண் தனது உறவினருடன் உடலுறவு கொண்டதன் காரணமாகவே கருவுற்றதாகவும், இதை அறிந்த அவளது தந்தை உள்ளிட்ட குடும்பத்தினர் கருக்கலைப்பு செய்ய முடிவு செய்ததாகவும் தெரியவந்தது.
சட்டப்பூர்வமாக பாதுகாப்பாக கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்பதற்காக, திட்டமிட்டு சோனு என்ற இளைஞரை சிக்க வைத்ததாகவும் தெரியவந்தது. பொய்க்குற்றச்சாட்டை வைத்து நீதிமன்றத்தையே குழப்பி கருக்கலைப்புக்கு அனுமதி பெற்றது அம்பலமானது. இதையடுத்து மூவரையும் ஆறு மாதம் சிறையில் அடைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிங்க:திருமணத்திற்கு மீறிய உறவை கண்டித்த மகன் கொலை... தாய் கைது...