வல்சாத்: குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற குழந்தைகள் திறமை தேடல் போட்டி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தலைப்புகளில் ஒன்றுதான் 'எனது முன்மாதிரி நாதுராம் கோட்சே'.
இந்தத் தலைப்பில் பேசிய மாணவருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது சர்ச்சையை மேலும் வலுப்படுத்தியது. இந்தக் குழந்தைகள் திறமை தேடல் போட்டி வல்சாத்தில் உள்ள குசம் வித்யாலாயா பள்ளியில் நடைபெற்றது. ஐந்து முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்ற இப்போட்டியில் அரசுப் பள்ளி, தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
'எனது முன்மாதிரி நாதுராம் கோட்சே' தலைப்பில் அம்மாணவன், மகாத்மா காந்தியை விமர்சித்தும் - கோட்சேவை நாயகனாகச் சித்திரித்தும் பேசியுள்ளார். மாணவர்களுக்கான இப்போட்டியைத் திட்டமிட்டு அதற்கான தலைப்புகளை மாவட்ட இளைஞர் மேம்பாட்டு அலுவலர் இறுதிசெய்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
அதேசமயம் இந்த விவகாரம் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தனது விசாரணையைத் தொடங்கினார். தொடர்ந்து இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுந்த அந்த அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த குஜராத் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனிஷ் தோஷி கூறுகையில், "மகாத்மா காந்தியை இந்தியாவின் பலவீனமான தலைவராகவும், கோட்சேவை நாயகனகாவும் சித்திரிக்கும் முயற்சிகள் நடந்துள்ளன.
இது குழந்தைகளின் மனத்தில் நேரடியான தாக்கத்தை உண்டாக்கும், மேலும் காந்தியின் சித்தாந்தத்திலிருந்து குழந்தைகளை அந்நியப்படுத்தும்விதமாக அவர்கள் கையாளப்பட்டுள்ளனர்" என்றார். இதுத் தொடர்பாக ஆர்எஸ்எஸ், பாஜக மீது அவர் குற்றம் சுமத்தினார்.
இதையும் படிங்க: தடையற்ற வர்த்தக வாக்குறுதியிலிருந்து பின்வாங்கும் சீனா - அமெரிக்கா தாக்கு!