காந்திநகர்: குஜராத் மாநிலம் பிலோதாவில் 10 வருடங்களுக்கு முன்பு விவசாயி ஒருவரது கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பிலோதா காவல் துறையினர், சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றை சோதனையிட்டனர். அப்போது உடல் பாகங்கள் வெட்டப்பட்ட நிலையில் கிடந்ததை உறுதி செய்தனர். அதில் ஒரு பெண்ணின் கையில் HP என எழுதப்பட்டிருந்தது.
இதனையடுத்து விசாரணையை முடுக்கிய காவல் துறையினர், உயிரிழந்த பெண் ஹசுமதி என்பதை கண்டுபிடித்தனர். இதன் அடிப்படையில், அவரது கணவரும் காவல்துறை அலுவலருமான அரவிந்த் மார்டா தாமூர் என்பவரை பிடித்து காவல் துறையினர் விசாரித்தனர். அதில், தனக்கும் தனது மனைவிக்கும் ஏற்பட்ட தகராறின்போது, மனைவி மற்றும் தனது 5 வயது குழந்தையை அரவிந்த் கொலை செய்துள்ளார்.
இருவரது உடலையும் 21 துண்டுகளாக வெட்டி கிணற்றில் வீசியுள்ளதும், இந்த செயலில் இவருடன் இருவர் உடன் இருந்ததும் தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து இதுதொடர்பான வழக்கு 10 வருடங்களாக ஆரவள்ளி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவரான அரவிந்த் மார்டா தாமூர் மற்றும் உடன் இருந்த இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவரது காவல் துறை பதவி பறிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மூன்றாவது மாடியில் இருந்து வீசப்பட்ட பச்சிளம் குழந்தை - டெல்லியில் கொடூரம்