புதுடெல்லி: இந்தியாவின் முதல் சூரிய சக்தி கிராமமாக, குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள மோதேரா கிராமத்தைப் பிரதமர் மோடி அக்.9 மாலை அறிவித்தார். 1026-27 வரை அப்பகுதியை ஆட்சி செய்த சாளுக்கிய மரபைச் சேர்ந்த இரண்டாம் பீமன் என்ற மன்னரால் கட்டப்பட்ட புகழ்பெற்ற சூரியக் கோயில் இங்குள்ளது.
இக்கிராமத்தில், 1000-க்கும் அதிகமான வீடுகளில் சூரிய ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சோலார் பேனல்கள் இலவசமாகப் பொருத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரிப்பதற்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக, குஜராத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்துவதை உறுதி செய்துள்ளதாக குஜராத் அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி, தொல்லியல் சிறப்புமிக்க மோதேரா கிராமத்திலுள்ள சூரிய கோயிலில் அதன் வரலாற்றைக் குறித்து அறிவதற்கு ஏதுவாக, 3D தொழில்நுட்ப முறையிலான திரைகளை பிரதமர் மோடி அறிவித்தார். இதன்மூலம், கோயில் வளாகத்தில் ஏற்றப்படும் விளக்குகளை பக்தர்கள் கண்டுகளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் முதல் சூரிய சக்தி கிராமம் மோதேரா எனப்பெருமிதம் தெரிவித்தார். இந்த கிராமத்தில் 1000 சோலார் பேனல்கள் வைக்கப்பட்டு 24 மணிநேரமும் கிராம மக்களுக்கு மின்சாரம் கிடைக்கும் வண்ணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ”நாய்க்கு வெறிபிடிச்சிடுச்சி” - ஹெச் ராஜாவின் ட்விட்டர் பதிவு குறித்து புகார்