கரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது, கரோனாவின் தாக்கம் குறைந்துவருவதால், பல்வேறு மாநிலங்களில் பள்ளிகளைத் திறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இந்நிலையில், பாதுகாப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் குஜராத் மாநிலத்தில் பள்ளிகள் விரைவில் திறக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து, அம்மாநிலத்தின் கல்வித் துறை அமைச்சர் பூபேந்திரசிங் சுதாசமா கூறுகையில், "ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கும்படி குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி வலியுறுத்தியுள்ளார்.
இதையடுத்து, பள்ளிக் கல்வித் துறையின் உயர் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினேன். பாதுகாப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுக்க உத்தரவிட்டுள்ளேன். அதேபோல், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உடன் சந்திப்பு நடத்தி கல்லூரிகள் எப்போது திறக்கலாம் எனபது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும்.
பாதுகாப்பு வழிமுறைகளை வகுத்த பின், பள்ளிகள் எப்போது திறக்கலாம் என்பது குறித்து முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோருடன் இணைந்து முடிவெடுக்கப்படும்" என்றார்.