அகமதாபாத்: பாகிஸ்தான் உளவுத்துறைக்கு தகவல்கள் வழங்கியதாக தாராபூர் நகரில் இருந்து ஒருவரை குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் (Anti-Terrorism Squad) கைது செய்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வழக்கு குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை குஜராத் ஏடிஎஸ் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் செல்போனை ஹேக் செய்து அவர்களின் தனிப்பட்ட தகவல்களை பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொண்டதாக கைது செய்யப்பட்ட நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், அந்த நபரை குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் நீண்ட காலமாக கண்காணித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட நபர் இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்களின் செல்போன்களை ஹேக் செய்து அவர்களின் தனிப்பட்ட தகவல்களை பாகிஸ்தான் ஏஜென்சிக்கு வழங்குவதை வழக்கமாம வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் அவர், இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் செயல்பாடுகள் குறித்த தகவல்களையும் பாகிஸ்தானுக்கு அனுப்புவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட நபருக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதும், அவர்களுடன் தகவல்களைப் பகிர்ந்து கொண்டதும் தெரியவந்துள்ளது என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கைது செய்யப்பட்ட நபர் இதுவரை பாகிஸ்தானுடன் என்ன தகவல்களை பகிர்ந்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் அந்த நபர் ராணுவ பள்ளிகளில் படிக்கும் ராணுவ வீரர்களின் குழந்தைகளை குறிவைத்து இத்தகைய சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவர் மீது ஐபிசியின் பல்வேறு பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், விரைவில் அந்த நபரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் குஜராத் போலீசாரிடம் ஒப்படைப்பார்கள் என கருதப்படுகிறது.
இதையும் படிங்க: நமோ பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்!