குஜராத்: 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு கடந்த 1ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது. முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 56.88 சதவீத வாக்குகள் பதிவாகின.
இரண்டாம் மற்றும் இறுதிக்கட்டமாக இன்று 14 மாவட்டங்களில் உள்ள 93 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. 26,409 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆம் ஆத்மி முதலமைச்சர் வேட்பாளர் இசுதன் காத்வி உள்ளிட்டோர் வாக்களித்தனர்.
மாலை 5 மணி நிலவரப்படி 58.68 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. அதிகபட்சமாக சபர்கந்தா மாவட்டத்தில் 65.84 சதவீத வாக்குகள் பதிவாகின. வரும் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.
குஜராத்தில் தொடர்ந்து 6 முறை வெற்றி பெற்ற பாஜக, இந்த முறையும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் குஜராத்தில் பாஜக, ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளதாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.