அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 1ஆம் தேதி நடந்தது. மொத்தமாக 89 தொகுதிகளில் 63.3 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு நாளை மறுநாள்(டிசம்பர் 5) வாக்குப்பதிவு நடக்கிறது. அந்த வகையில், அகமதாபாத், வதோதரா, காந்திநகர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் தேர்தல் நடக்கிறது. குறிப்பாக முதமைச்சர் பூபேந்திர படேலின் கட்லோடியா தொகுதி, பாஜக வேட்பாளராக ஹர்திக் படேல் போட்டியிடும் விராம்காம் தொகுதி, பாஜக வேட்பாளர் அல்பேஷ் தாக்கூர் போட்டியிடும் காந்திநகர் தெற்கு தொகுதியில் தேர்தல் நடக்கிறது. இந்த வாக்குப் பதிவுக்கான பரப்புரை இன்று (டிசம்பர் 3) மாலையுடன் முடிந்தது.
இந்த பரப்புரையில் பாஜக சார்பில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதலமைச்சர் பூபேந்திர படேல் ஆதியோர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களும் பரப்புரையில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாமல் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தோல்கா, மஹூதா, காம்பத் பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அதேபோல மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மொடாசா மற்றும் சித்பூர் நகரங்களில் பேரணியில் ஈடுபட்டார்.
இதையும் படிங்க: இந்திய கடற்படை 2047ஆம் ஆண்டுக்குள் தற்சார்பாக மாறும் - கடற்படைத் தளபதி ஹரி குமார்