டெல்லி: பைகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் பிராண்டட் அரிசி, கோதுமை மாவு, மைதா, பருப்பு வகைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் மீது 5 விழுக்காடு ஜிஎஸ்டி விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஜிஎஸ்டி வசூல் கடந்த 18ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரும் என அரசியல் கட்சிகள், பொதுமக்கள் உள்ளிட்டப் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் எந்தெந்த பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படும், எவற்றிற்கு விலக்கு அளிக்கப்படும் என்பதைப் பார்க்கலாம்...
- பைகளில் அடைக்கப்பட்ட 25 கிலோ எடையுள்ள தானியங்கள், பருப்பு வகைகள், மாவு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும், அவை முன்கூட்டியே பேக் செய்யப்பட்ட மற்றும் லேபிளிடப்பட்ட பொருட்களாகக் கருதப்படும்.
- தானியங்கள், பருப்பு வகைகள் உள்ளிட்டவற்றின் 10 கிலோ பேக்கேஜ்களுக்கும் புதிய ஜிஎஸ்டி பொருந்தும்;
- ஒரு சில்லறை கடைக்காரர் உற்பத்தியாளரிடமிருந்தோ அல்லது விநியோகஸ்தர்களிடமிருந்தோ வாங்கிய அத்தியாவசிய பொருளை, 25 கிலோ பேக்கில் நுகர்வோருக்கு விற்றால் அதற்கு ஜிஎஸ்டி விதிக்கப்படாது
- 25 கிலோ அல்லது 25 லிட்டருக்கும் அதிக எடை கொண்ட தானியங்கள், பருப்பு வகைகள், மாவு போன்றவை தொழில் நிறுவனங்ளுக்கு விநியோகம் செய்யப்பட்டால், அவற்றிற்கு இந்த ஜிஎஸ்டி பொருந்ததாது. அதாவது, தொழில் நிறுவனங்களுக்கு சப்ளை செய்யப்படும் அத்தியாவசியப்பொருட்களுக்கு இந்த ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
- பருப்பு வகைகள், தானியங்கள் தவிர, பேக் செய்யப்பட்ட பொரி, மெஸ்லின் ஃபிளார், இறைச்சி மற்றும் மீன் ஆகியவற்றிற்கும் 5 விழுக்காடு ஜிஎஸ்டி விதிக்கப்படும்.
- மாம்பழ கூழ் உட்பட அனைத்து வகையான மாம்பழங்களுக்கும் 12 விழுக்காடு ஜிஎஸ்டி விதிக்கப்படும். பேக் செய்யப்படாமல் சில்லறையாக விற்பனை செய்யப்படும் மாம்பழங்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
- திரவ பானங்கள் அல்லது பால் பொருட்களை பேக் செய்ய பயன்படுத்தப்படும் டெட்ரா பேக் மீதான ஜிஎஸ்டி 18 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. டர்பைன் பம்புகள், சைக்கிள் பம்புகள் உள்ளிட்டவற்றின் மீதான ஜிஎஸ்டியும் 18 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.
- இங்க், கத்திகள், பென்சில் ஷார்பனர்கள், பிளேடுகள், கரண்டிகள் போன்றவற்றிற்கான ஜிஎஸ்டி 12 விழுக்காட்டிற்குப் பதிலாக 18 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.
- எல்இடி விளக்குகள், விளக்குகள், அவற்றின் உலோக அச்சிடப்பட்ட சர்க்யூட் போர்ட் ஆகியவற்றிற்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது.
- மருத்துவமனையில் நோயாளிகள் தங்கியிருக்கும் அறை வாடகை ஐந்தாயிரம் ரூபாய்க்கும் மேல் இருந்தால், அதற்கும் 5 விழுக்காடு ஜிஎஸ்டி விதிக்கப்படும். ஐசியுக்கு மட்டும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் விடுதிகளில் எடுக்கும் அறையின் வாடகை ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தால், அதற்கு 12 விழுக்காடு ஜிஎஸ்டி விதிக்கப்படும்.
மத்திய அரசின் இந்த வரி விதிப்பு நடவடிக்கை சாதாரண மக்களின் நிதிச்சுமையை மேலும் அதிகரிக்கும். மருத்துவமனைகள், உணவகங்கள், விடுதிகள் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் இந்த ஜிஎஸ்டி விதிப்பு கடுமையான விலை உயர்வைக்கொண்டு வரும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.