புது டெல்லி: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னதாக காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகை வழங்கப்பட்டு விட்டதாகக் கூறிய நிலையில், இதற்கு நேர் எதிராக, இம்மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் ஒன்றிய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
இது குறித்து இன்று (ஜூன்.16) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராஜஸ்தான் மாநிலத்திற்கு கடந்த மார்ச் 31ஆம் தேதி வரையிலான கணக்கின்படி 4,635 கோடி ரூபாய், மே மாதம் வரையிலான கணக்கின்படி 2,507 கோடி ரூபாய் என மொத்தம் 7,142 கோடி ரூபாய் நிலுவைத் தொகை வழங்கப்பட வேண்டும்.
சத்தீஸ்கரைப் பொறுத்தவரை, ஜூன் 1ஆம் தேதி வரையிலான ஜிஎஸ்டி நிலுவைத் தொகை 3,069 கோடி ரூபாய். எனினும், அனைத்து மாநிலங்களுக்கும் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை வழங்கப்பட்டு விட்டதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்" எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
தொடர்ந்து 8 மாதங்களாக ஒரு லட்சம் கோடிக்கு மேல் ஜிஎஸ்டி வசூல்
நிதி அமைச்சகத்தின் தரவுகளின் படி, மே மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வசூல் 1,02,709 கோடி ரூபாய் ஆகும். இதன்படி, தொடர்ந்து எட்டாவது மாதமாக ஒரு லட்சம் கோடிக்கு மேல் ஜிஎஸ்டி வருவாய் பெறப்பட்டுள்ளது.
கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையையும் தாண்டி, கடந்த ஏப்ரல் மாதத்தில், இந்தியாவின் மொத்த ஜிஎஸ்டி வரி வருவாய் வசூல் 1.41 லட்சம் கோடி ரூபாயை எட்டி புதிய சாதனையைப் படைத்தது. 2017 ஆம் ஆண்டு ஜிஎஸ்டி வரி இந்தியாவில் அறிமுகப்படுத்த நிலையில், அது முதல் பெறப்பட்ட அதிகபட்ச வரி வருவாய் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.