டெல்லி: தாளில்லா டிஜிட்டல் மத்திய பட்ஜெட் 2022-23 நிர்மலா சீதாராமனால் இன்று (பிப்ரவரி 1) தாக்கல்செய்யப்பட்டது. அப்போது, பல்வேறு துறைகளுக்கான நிதியை ஒதுக்கி அவர் முன்மொழிந்து அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது அவர் பேசுகையில், "பொருளாதாரம் விரைந்து மீண்டுவரும் நிலையில் ஜிஎஸ்டி வருவாய் ஜனவரியில் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 986 கோடி ரூபாய் எட்டி சாதனை படைத்திருக்கிறது. இது ஜிஎஸ்டியில் (சரக்கு - சேவை வரி) குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுவருவதைக் காட்டுகிறது. ஆனாலும் இன்னும் சில சவால்கள் இருக்கின்றன.
ஜனவரி வரை கடந்த ஏழு மாதங்களாக சரக்கு - சேவை வரி வருவாய் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேலாக கிடைத்துவருகிறது. இரண்டாவது அதிகபட்ச வருவாய் ஏப்ரல் மாதத்தில் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 708 கோடி ரூபாய் ஈட்டப்பட்டது. அதேசமயம் டிசம்பரில் 1.29 லட்சம் கோடிக்கு அதிகமாக வருவாய் கிடைத்தது.
2020-21இல் 6.6 ஆக குறைந்த காணப்பட்ட பொருளாதார வளர்ச்சி நல்ல முன்னேற்றம் கண்டு நடப்பு நிதியாண்டு 2022 மார்ச்சில் 9.2 விழுக்காடு அதிகரித்தது. தடுப்பூசித் திட்டம், பெருந்தொற்று கட்டுப்பாடுகளுக்குப் பிறகு இந்த ஏற்றம் நிகழ்ந்துள்ளது" என்றார் பெருமிதத்துடன்.
இதையும் படிங்க: Union Budget 2022: அடுத்த 25 ஆண்டுகளுக்கு நாட்டின் வளர்ச்சிக்கான அடித்தளம்