ரோம்: 1984ஆம் ஆண்டில் நேஷனல் ஜியோகிராபிக் (National Geographic) இதழின் அட்டைப்படத்தில் ”பச்சை கண்கள் கொண்ட ஆப்கன் சிறுமி” என்னும் தலைப்பில் வெளியான புகைப்படத்தை உலக மக்களால் இன்றளவும் மறந்துவிட முடியாது.
ஆப்கனில் அப்போது நிலவிய போரை உலகிற்கு எடுத்துக் காண்பித்த அந்த அட்டைப் படத்தில் இருந்த பச்சை நிறக் கண்கள் கொண்ட பெண் தற்போது தாலிபன்களின் பிடியில் ஆப்கனானிஸ்தான் இருப்பதால் இத்தாலி நாட்டிற்கு தஞ்சம் அடைந்துள்ளார்.
கடந்த ஆகஸ்டு மாதம் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினர் வெளியேறியதைத் தொடர்ந்து தாலிபன்கள் கட்டுப்பாட்டுக்குள் ஆப்கானிஸ்தான் சென்றது. இதனையடுத்து ஆப்கானிஸ்தான் மக்கள் பலரும் அந்நாட்டை விட்டு வெளியேறி வெறு நாடுகளுக்கு செல்கின்றனர்.
இந்த நிலையில் ஆப்கன் பச்சை கண்கள் சிறுமி என பெயரெடுத்த ஷர்பட் குலா (Sharbat Gula) ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற சர்வதேச நாடுகள் உதவ வேண்டும் என்று கோரியிருந்தார்.
அவருக்கு இத்தாலி அரசு உதவ முன்வந்துள்ளது. 1984ஆம் ஆண்டில் போர் புகைப்படக்காரர் ஸ்டீவ் மெக்கரி எடுத்த புகைப்படத்திலிருந்த பச்சை நிறக் கண்கள் கொண்ட இந்தப் பெண் மீண்டும் 2002ஆம் ஆண்டு ஸ்டீவ் மெக்கரி கண்களில் பட்டார். அப்போதைய ஆப்கானிஸ்தானின் நிலையை உலகிற்குக் காண்பித்த இதே கண்கள் தற்போது இத்தாலியில் தஞ்சமடைந்துள்ளன.
இது குறித்து இத்தாலி அரசாங்கம், “ஆப்கானிஸ்தான் தாலிபன்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்ற பின்பு பலரும் இத்தாலிக்கு தஞ்சமடைகின்றனர். இதேப்போன்று உலகப் புகழ்பெற்ற புகைப்படத்திலிருந்த ஷர்பட் குலாவும் இத்தாலியில் குடியேற்றப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஆப்கனில் பெண் குழந்தைகள் கல்வி குறித்து யுனிசெஃப் கவலை