வேளாண் திருத்தச் சட்டத்திற்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்திற்கு ராகுல் காந்தி தொடர்ந்து ஆதரவு தெரிவித்துவருகிறார். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை நீக்க வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறார். இந்நிலையில், பிரிட்டிஷ்காரர்களால்கூட விவசாயிகளை எதிர்த்து நிற்க முடியவில்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ கங்காநகர் மாவட்டம் பதம்பூரில் நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் கலந்துகொண்ட அவர், "நாடு முழுவதும் 40 விழுக்காட்டினர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். பாரத மாதாவின் தொழிலான விவசாயம்தான் நாட்டு மக்களுக்கு உணவளிக்கிறது" என்றார்.
விவசாயிகளுக்கான போராட்டமாக மட்டும் இதனை கருத முடியாது என்பதால் இச்சட்டத்திற்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் பரவும். சிறு மற்றும் நடுத்தர தொழிலாளர்கள், வணிகர்கள், நடுத்தர வர்க்கத்தினர் ஆகியோரின் பிரச்னை இது" என தெரிவித்துள்ளார்.