டெல்லி: நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிலருக்கு, வெளிநாடுகளில் இருந்து மருந்துகள் வாங்கப்படுகின்றன. கூடுதல் விலை கொடுத்து வாங்கப்படும் அந்த மருந்துகளுக்கு, இறக்குமதி வரியும் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் அரிய வகை நோய்களுக்காக வாங்கப்படும் மருந்துகள் மற்றும் சிறப்பு மருத்துவ நோக்கத்துக்காக பெறப்படும் உணவுகளுக்கு, இறக்குமதி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த நடைமுறை ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புற்றுநோய் குணமாக பயன்படுத்தப்படும் Pembrolizumab மருந்துக்கும், இறக்குமதி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பொதுவாக இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 10 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. எனினும் உயிர் காக்கும் சில மருந்துகளுக்கு மட்டும் சலுகை அடிப்படையில் 5 சதவீத வரி விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரிய வகை நோய்களுக்கான தேசிய கொள்கை 2021ன் அடிப்படையில், அரிய வகை நோய்கள் குணமாக பயன்படுத்தப்படும் அனைத்து விதமான மருந்துகளின், இறக்குமதி வரிக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
அரியவகை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு குழந்தையின் எடை 10 கிலோ என்றால், ஆண்டு தோறும் அந்த குழந்தையின் மருத்துவச் செலவுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை தேவைப்படுகிறது. குழந்தையின் வயது மற்றும் எடை அதிகமாகும் போது, அதற்கேற்ப மருத்துவச் செலவும் அதிகரிக்கும். தற்போது அரியவகை நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு வழங்கப்பட்டுள்ள இறக்குமதி வரி விலக்கு, நோயாளிகளுக்கு நல்ல தீர்வாக இருக்கும்"என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு ஊட்டச்சத்து பெறுவதற்காக, சிறப்பு நோக்கத்துக்கான உணவை இறக்குமதி செய்ய விரும்புவோர், அதற்கான வரியில் இருந்து விலக்கு பெற மத்திய அல்லது மாநில அரசுகளின் சுகாதார பணிகள், மாவட்ட சுகாதார அதிகாரி, மாவட்ட அறுவை சிகிச்சை நிபுணரிடம் சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோயில் கிணற்றில் தவறி விழுந்த 25 பேரை மீட்கும் பணி தீவிரம்!