புதுச்சேரி: முதலியார்பேட்டை, உழந்தை கீரப்பாளையம், சித்தர் பீடம் கோயிலில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினைத் தொடங்கிவைத்து துணைநிலை ஆளுநர் தமிழிசை பேசுகையில்,
"அனைத்துச் சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் கரோனா தடுப்பூசி போடுவதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கோரிக்கைவைத்திருந்தேன். கட்சி எல்லைகளைக் கடந்து அவர்கள் அனைவரும் சிறப்பாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
மக்களே தயக்கமில்லாமல் தடுப்பூசி போடுங்க!
சுகாதாரத் துறை ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் ஒரு மருத்துவக் குழுவை வழங்கியிருக்கிறது. கரோனா தடுப்பூசி போடுவதற்கான தீவிர விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். உலகம் முழுவதும் கரோனா மூன்றாவது அலை ஏற்பட்டிருக்கிறது.
கரோனா நம்மைத் தீவிரமாகத் தாக்காமல் இருப்பதற்குத் தடுப்பூசியே காரணம். புதுச்சேரியில் ஒரு நாளும் தடுப்பூசித் தட்டுப்பாடு ஏற்பட்டதில்லை. மக்களின் நலன்கருதி முன்னேற்பாடாகத் தடுப்பூசிகளை வாங்கி வைத்திருக்கிறோம்.
மக்கள் தயக்கமின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். உலக அளவில் நடந்த பரிசோதனைகளில் அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டவர்கள் எல்லாம் தடுப்பூசி போடாதவர்கள் என்று தெரிகிறது.
பள்ளிகள் திறப்பு எப்போது?
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்க இருக்கிறார்கள். நமது பாடத் திட்டம் தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தோடு ஒத்திருப்பதால் தமிழ்நாடு அரசு எடுக்கும் முடிவை ஒட்டி நாம் முடிவு எடுக்க வேண்டி இருக்கிறது.
குழந்தைகள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆசிரியர்கள், ஊழியர்கள், பெற்றோர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தீபாவளி போன்ற பண்டிகைகள் வர இருப்பதால் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். அவர்களுக்காகத்தான் அரசும் திட்டங்களும். மக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சற்று கடுமையாகவும் சொல்ல வேண்டியிருக்கிறது.
சொட்டு மருந்தாகும் கரோனா தடுப்பூசி?
அக்டோபர் 2ஆம் தேதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவருகிறோம். பள்ளி மாணவர்களுக்கான தடுப்பூசி அறிவியல்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஆனால் போலியோ சொட்டு மருந்தைப் போல கரோனா தடுப்பூசி மருந்தை சொட்டு மருந்தாகத் தயாரிப்பதற்கு பாரத் பயோடெக் நிறுவனம் ஆராய்ச்சி மேற்கொண்டுவருகிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தனியார் பள்ளிகள் கோரிக்கை