பிலாஸ்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பச்பேடி அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பிரதீப் ஸ்ரீவஸ்தவா (61) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் நேற்று (டிச.15) நள்ளிரவில் தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, இளைஞர் ஒருவர் அவரை பின்தொடர்ந்து சென்றார்.
தலைமையாசிரியர் வீட்டின் வாயிலுக்கு சென்றபோது, அவரை தடுத்து நிறுத்திய இளைஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், தலைமை ஆசிரியரை சுத்தியல், கத்தி ஆகியவற்றால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் ஆசிரியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினர், விசாரணை நடத்தி நள்ளிரவிலேயே சம்மந்தப்பட்ட இளைஞரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பெயர் உபேந்திர கெளசிக் என தெரியவந்தது.
தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், தலைமையாசிரியராக இருந்த பிரதீப், அவரிடம் படிக்கும் தனது காதலியை துன்புறுத்தியதாகவும், அதன் காரணமாகவே அவரை கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவர் - கைதுக்கு பயந்து தற்கொலை முயற்சி