ஆன் பிராங்க் இரண்டாம் உலகப்போரின் காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு யூதச் சிறுமி. இவர் தன்னுடைய குடும்பத்துடன் நெதர்லாந்தில் வசித்து வந்தார். இரண்டாம் உலகபோரின் போது ஜெர்மனியில் நாசிப்படைகளால் யூதர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டு வந்தனர். இதனால் ஆன் ப்ராங்கின் குடும்பம் அவரது தந்தையின் சொந்த அலுவலக ரகசிய அறையிலேயே மறைந்து வாழும் நிலை ஏற்பட்டது.
அப்போது 13 வயது சிறுமியாக இருந்த ஆன் ப்ராங்க் மற்ற சிறுவர்களைப் போல பள்ளிக்கு செல்வது, விளையாடுவது, இப்படி எதையும் செய்ய இயலவில்லை. இதனால் தன்னுடைய பொழுது போக்கிற்காகவும் தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தவும் டைரி எழுத தொடங்கினார். ஆன் ப்ராங்க் தான் எழுதிய அந்த டைரிக்கு ”கிட்டி” என பெயர் வைத்து அதை தன்னுடைய நண்பனாக நிணைத்து தன்னுடைய தினசரி அனுபவங்களையும், மறைந்து வாழ்வதில் எதிர்கொண்ட சிக்கல்களையும் பதிவு செய்துள்ளார். இவர் எழுதிய டைரி குறிப்புகள் இரண்டாம் உலகப்போரில் யூதர்கள் கொல்லப்பட்டதை ஆவணப்படுத்தும் வகையில் இருந்ததால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஆன் ப்ராங்க் மற்றும் அவருடைய குடும்பம் சுமார் இரண்டு ஆண்டுகள் வரை நெதர்லாந்தில் மறைந்து வாழ்ந்தனர். ஆன் ப்ராங்க் டைரி எழுதிய போது அவருடைய வயது 13-15. ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் இருக்கும் இடம் ஜெர்மனியில் நாசிப்படைகளால் கண்டுபிடிக்கப்பட்டு முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு ஆன் ப்ராங்க் கொல்லப்பட்டார்.
இவருடைய குடும்பம் நாசிப்படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டவுடன் ஆன் ப்ராங்கின் தந்தையுடன் பணிபுரிந்த மீப் கீஸ் என்பவரால் இவரது டைரி மீட்கப்பட்டது. அதை அவர் ஆன் இடம் கொடுப்பதற்காக பத்திரப்படுத்தி வைத்திருந்தார். ஆனால் ஆன் கொல்லப்பட்டதால் ஆன் குடும்பத்தில் உயிருடன் இருந்த ஒரே ஒருவரான அவர் தந்தையிடம் ஒப்படைத்தார்.
இதையடுத்து புத்தகமாக ஆன் ப்ராங்கின் டைரி குறிப்பு 1947 அம் ஆண்டு ஜுன் 25 ஆம் தேதி “தி டைரி ஆப் யங் கேல்” (ஒரு இளம்பெண்ணின் டைரி) என்னும் பெயரில் வெளியிடப்பட்டது. இந்த புத்தகம் இன்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புத்தகங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. ஏறத்தாழ 70 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்கப்பட்டுள்ளது. மேலும் இருபதாம் நூற்றாண்டில் வெளியான தலைசிறந்த புத்தகங்களுள் முதன்மையானதாக கருத்தப்படுகிறது.
இப்படி புகழ் பெற்ற ஆன் ப்ராங்கின் டைரி புத்தகமாக வெளியிடப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள் ஆகிவிட்டதை தொடர்ந்து கூகுல் நிறுவனம் ஆன் ப்ராங்கிற்கு டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: நீரஜ் சோப்ரா பெற்றோரின் முதல் விமானப் பயணம்: கனவை நனவாக்கிய தங்க மகன்!