பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரைன் மீது போர் தொடுப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்தார். இதனையடுத்து இரு வேறு பகுதிகள் வழியாக உக்ரைனுக்குள் நுழைந்து, ரஷ்யப் படைகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. உக்ரைனின் பல்வேறு நகரங்களைக் கைப்பற்றிய ரஷ்யப்படைகள், தலைநகர் கீவ்வை நோக்கி முன்னேறி வருகின்றன.
இதனையடுத்து ரஷ்ய அரசின் போக்கை கண்டித்து, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளும் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக உச்சகட்ட பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. பல நாடுகளின் வான் பரப்பில் ரஷ்ய விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளன.
நேற்றைய தினம் (பிப்ரவரி 26) ரஷ்ய அரசுக்குச் சொந்தமான, தனியார் ஊடகங்கள் உள்ளிட்டவற்றின் விளம்பர வருமானத்திற்கு ஃபேஸ்புக், யூ-ட்யூப் போன்ற நிறுவனங்கள் தடை விதித்தன. இதனை சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் செய்தித் தொடர்பாளர்கள் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்தனர்.
இந்நிலையில் ஃபேஸ்புக், கூகுளைத் தொடர்ந்து கூகுள் நிறுவனமும் ரஷ்யாவைச் சேர்ந்த ஊடகங்களின் விளம்பர வருமானங்களுக்குத் தடை விதித்துள்ளது.
அதாவது கூகுளுக்குச் சொந்தமான ஆப்கள் உள்ளிட்டவற்றில் ரஷ்ய ஊடகங்கள் விளம்பரம் மூலம் பெறும் வருமானத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்ய ஊடகவியலாளர்கள் கூகுள்மூலம் பெறும் வருவாய் இனிமேல் கிடைக்காது.
இந்தத் தகவலை கூகுள் நிறுவனத்தின் தலைமை அமைப்பான ஆல்பாபெட் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: புறப்பட்டது நான்காவது விமானம்: உக்ரைனில் சிக்கிக்கொண்ட 198 இந்தியர்கள் பாதுகாப்பாக புறப்பட்டனர்