உத்தரகாண்ட்: ’தேவபூமி’ என்று அழைக்கப்படும் உத்தரகாண்ட் மாநிலத்தில் பழமையான கோயில்கள் உள்ளன. இங்குள்ள பழங்கால கோயில்கள் புராண காலத்திலிருந்தே மக்களின் நம்பிக்கையைப் பெற்று வருகின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று அல்மோராவின் சிட்டாயில் அமைந்துள்ள புகழ்பெற்ற "கோலு தேவ்தா" கோயில்.
இக்கோயிலில் உள்ள ’கோலு தேவ்தா’ நீதியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். இக்கடவுள் பைரவரின் வடிவம் என்று அறியப்படுகிறது. இக்கோயிலில் வந்து வேண்டுதலை செலுத்தினால், நீதி கிடைக்கும் என மக்கள் நம்புகின்றனர். நீதிமன்றங்களில் நீதி கிடைக்காதவர்கள் கூட இக்கோயில் மூலம் நீதி பெற்றதாக கூறப்படுகிறது.
பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை துண்டுச்சீட்டில் எழுதி கோயிலில் கட்டுகின்றனர். சிலர் தபால் மூலமாகவும் வேண்டுதல்களை அனுப்பி வைக்கின்றனர். அவ்வாறு நீதி கிடைத்தவர்கள் அதற்கு காணிக்கையாக மணி ஒன்றை கோயிலில் கட்டுகின்றனர். இக்கோயில் முழுவதும் மணிகள் மயமாக காட்சியளிக்கிறது.
பக்தர்களுக்கு நீதி கிடைப்பதையே இந்த மணிகள் எடுத்துரைக்கின்றன. இதனால் ஒவ்வொரு ஆண்டும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இக்கோயிலுக்கு வந்து செல்கின்றனர். யாரிடம் நீதி கிடைக்காவிட்டாலும் "கோலு தேவ்தா" கோயிலில் நீதி கிடைக்கும் என மக்கள் பெரிதும் நம்புகின்றனர்.
இதையும் படிங்க: நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுல், சோனியாவுக்கு அமலாக்கத் துறை சம்மன்