புரட்சிகர கவிதைகளாலும், பாமர மக்களுக்கான எழுத்து நடையினாலும் அனைவரையும் கவர்ந்தவர் மகாகவி பாரதியார். இன்று அவருடைய 139ஆவது பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்நிலையில், டெல்லியில் உள்ள மகாகவி பாரதியாரின் சிலையை முறையாக பராமரிக்கக் கோரி டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் ஜி.கே. வாசன் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், "சுதந்திர போராட்டத்தின்போது மக்களிடையே தேசியவாதத்தை தட்டி எழுப்பிய தலைசிறந்த கவிஞரான மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 139ஆவது பிறந்த நாளை முன்னிட்டு டெல்லி ரமண மகரிஷி மார்க்கில் உள்ள அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த எனக்கு நல்வாய்ப்பு கிடைத்துள்ளது.
அந்த இடத்திற்கு சென்றபோதுதான், அவரின் அடையாளங்களில் ஒன்றும் சிலையின் முக்கிய பாகமான தடி இல்லாமல் இருப்பதை கண்டேன். அதுமட்டுமின்றி, சிலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் முறையாக பராமரிக்காமல் இருப்பதை கவனித்தேன். இதுகுறித்த செய்திகளும் வெளிவந்துள்ளன.
மிகச் சிறந்த தமிழ் கவிஞரான பாரதியின் தடியை மீண்டும் அங்கு வைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டு கொள்கிறேன். அதுமட்டுமின்றி, சிலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை முறையாக பராமரிக்க வேண்டுகோள் விடுக்கிறேன். சுதந்திர போராட்ட வீரர், தேசிய கவிஞர், சமூக சீர்திருத்தவாதி என பன்முகம் கொண்ட அவருக்கு நாம் மேற்கொள்ளும் பொறுத்தமான மரியாதையாக இருக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.