கர்நாடகா: கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டத்தில் ககுண்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த ஷாலினி(17) என்ற சிறுமி, தனது பக்கத்து கிராமத்தில் வசிக்கும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்துள்ளார்.
இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்ததாகத் தெரிகிறது. இவர்களது காதல் குறித்து, ஷாலினியின் பெற்றோருக்கு தெரியவந்தையடுத்து, அவர்கள் ஷாலினியின் காதலன் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, போலீசார் இருவரையும் அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, ஷாலினி தான் காதலிப்பது உண்மை என்றும், அதனால் பெற்றோருடன் செல்ல விருப்பமில்லை என்றும் போலீசில் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஷாலினியை போலீசார் குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
பிறகு, தனது பெற்றோருக்கு அழைத்த ஷாலினி வீட்டிற்கு வருவதாக தெரிவித்துள்ளார். அதன்படி பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர். வீட்டிற்கு சென்றதும், தனது காதலனை திருமணம் செய்யும் முடிவில் மாற்றம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷாலினியின் தந்தை சுரேஷ், மகளை கழுத்தை நெரித்துக்கொலை செய்துள்ளார். பிறகு மகளின் சடலத்தை அவளது காதலன் ஊரில் உள்ள நிலத்தில் புதைத்துள்ளார்.
இதையடுத்து காவல் நிலையம் சென்ற சுரேஷ், மகளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டு சரணடைந்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சுரேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'பொல்லாத காதல்' : அரசுப்பணி கிடைத்த மனைவிக்கு கணவர் செய்த கொடூரம்!