கோட்டயம்: கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி, கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி காலையில், பால் வாங்குவதற்காக சென்றபோது, அவரை தெருநாய் ஒன்று கடித்தது. இதையடுத்து சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தினர்.
சிறுமிக்கு மூன்று தவணையாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமியின் உடல்நிலை திடீரென மோசமானதால், பத்தினம்திட்டா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு மேல் சிகிச்சைக்காக கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறுமிக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவக்குழுவை அமைத்து கேரள அரசு நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி இன்று(செப்.5) உயிரிழந்தார். ரேபிஸ் நோய் பாதிப்பால் சிறுமி இறந்ததாக தெரிகிறது. மூன்று தவணை ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டபோதும், ரேபிஸ் நோய் தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவர்கள் கூறுகையில், "சிறுமி ரேபிஸ் நோயால் இறந்ததாகவே தெரிகிறது. சிறுமியின் மாதிரிகள் புனே வைராலஜி நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்ததும் சிறுமியின் இறப்புக்கான காரணம் உறுதிபடுத்தப்படும்" என்று தெரிவித்தனர்.
முன்னதாக கடந்த வாரம், ரேபிஸ் தடுப்பூசியின் தரம் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்படும் என கேரள அரசு அறிவித்திருந்தது.
இதையும் படிங்க: பாட்னாவில் படகு கவிழ்ந்து விபத்து... 10 பேர் மாயம்...