ராஜஸ்தான் மாநிலத்தில் 21 மாவட்டங்களில் 4 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. அங்குள்ள 4 ஆயிரத்து 371 ஒன்றிய கவுன்சில் (பஞ்சாயத்து சமிதி), 636 மாவட்ட கவுன்சில் (ஜில்லா சமிதி) ஆகியவற்றில் பதிவான வாக்குகள் நேற்று (டிச.10) எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
தேர்தலின் முடிவில், மாநிலத்தின் ஆளும் கட்சியான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியைவிட எதிர்க்கட்சியான பாஜக அதிக இடங்களை கைப்பற்றியது. பாஜகவின் இந்த வெற்றி அரசியல் களத்தில் பேசும்பொருளாகியுள்ளது.
ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், “ பஞ்சாயத்து ஒன்றிய கவுன்சில் மற்றும் மாவட்ட கவுன்சில் தேர்தல்களின் முடிவுகள் நாங்கள் எதிர்பார்த்தது போல அமையவில்லை. கடந்த ஒன்பது மாதங்களாக, எங்கள் அரசு கோவிட்-19 அச்சுறுத்தலில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது. மக்களின் உயிர்களையும், அவர்களின் வாழ்வாதாரத்தையும் காப்பதே எங்களது அரசின் பிரதான நோக்கமாக இருந்தது.
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பணிகளில் காங்கிரஸ் கவனம் செலுத்திவந்தது. ராஜஸ்தான் மாநில அரசின் சாதனைகளை, மக்கள் பணிகளை விளம்பரப்படுத்த நேரம் கிடைக்கவில்லை. இதனை பயன்படுத்திய எதிர்க்கட்சி மக்களை தவறாக வழிநடத்தியது. மக்களிடமிருந்து வரும் கருத்துக்களைக் கருத்தில் கொண்டு எதிர்க்கட்சிக்கு பொருத்தமான பதிலை அளிப்போம்.
எதிர்க்கட்சியான பாஜக தனது தலைமையிலான அரசை கவிழ்க்க "கேம் ஆஃப் ட்ரோன்" ஆட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளது" என்று கூறினார்.
உள்ளாட்சித் தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் வெற்றிபெறாது என காலங்காலமாக இருந்துவரும் நம்பிக்கையை உடைக்கும் விதமாக தெலங்கானா (ஹைதராபாத்), ராஜஸ்தான் மாநிலங்களில் நடைபெற்று முடிந்த தேர்தல்களில் பாஜக வெற்றியடைந்துள்ளது. இந்த மாநிலங்களில் பாஜகவின் வளர்ச்சி அதிகரித்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : விவசாயிகள் போராட்டம்: ஆதரவு தெரிவிக்கும் விடுதலைச் சிறுத்தைகள்