ஹல்டவானி (உத்தரகாண்ட்): உத்தரகாண்ட் மாநிலத்தின் பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள கங்கோலிஹாட் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் ஃபகீர் ராம் டாம்டா மிகவும் எளிமையானவர் ஆவார். இவர் தச்சு தொழிலில் ஈடுபட்டு வந்த சாதாரணத் தொழிலாளி, எம்எல்ஏவாக பதவியேற்ற பின்னும் மிகவும் எளிமையாக வாழ்ந்து வருகிறார். இவரது செல்வாக்கை கொண்டு, அவரின் மகன்களுக்கு சலுகைகள் செய்து கொடுக்காமல் உள்ளார்.
ராம் டாம்டாவின் மூத்த மகனான ஜெகதீஸ் என்பவர் சைக்கிள்களுக்கு பஞ்சர் பார்க்கும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்தக் கடையானது தாமுதவான் சவுபாவின் சாலையோரமாக உள்ளது. இவரது இளைய சகோதரர் பீரேந்திரா ராம் தச்சு வேலை செய்து வருகிறார். இருவரும் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளனர்.
இதுகுறித்து ஜெகதீஸ் கூறுகையில், “ என் தந்தை கங்கோலிஹாட் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் ஆனதில் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவரும் முன்னாட்களில் தச்சு வேலை செய்தார். கங்கோலிஹாட் தொகுதி மக்களுக்கு இனி வரும் காலங்களில் முன்னேற்றம் ஏற்படும். நியாயமான முறையில் வாழ்வதே எனது பழக்கம், நான் செய்யும் தொழில் மூலம் வரும் வருமானமே எனக்கு போதுமானது” எனக் கூறினார்.
அவரது இளைய மகன் பீரேந்திரா ராம் தெரிவிக்கையிலும், “எனது தந்தை செய்த தச்சுத் தொழிலை பின் தொடர்ந்து செய்து வருகிறேன். என் தந்தை எம்எல்ஏ-வாகியது எங்கள் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த வில்லை. இந்த தொகுதிக்கு சில நன்மைகளை செய்து வருகிறார். இனி வரும் காலங்களிலும் செய்வார். நாங்கள் இவ்வாறு எளிமையாக இருப்பதையே விரும்புகிறோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:சஸ்பென்ஸ் உடைத்த பகவந்த் மாண்: ஊழலுக்கு எதிராக நடவடிக்கை!