பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள எலஹங்கா (Yelahanka) பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த இருவர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அதை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். பின்னர், அந்த வீடியோவை காட்டி சிறுமியை மிரட்டி மீண்டும், பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இம்முறை தங்களது நண்பர்கள் 6 பேரையும் கூட்டு சேர்த்துக் கொண்டு, சிறுமியை மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது அந்தக் கொடூர கும்பல்.
சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு திரும்பியபோது, பெற்றோர் கேட்டதற்கு காரமாக சாப்பிட்டதால் அழுவதாக கூறியுள்ளார். சிறுமியின் நிலைமைப் பார்த்த பெற்றோர் மீண்டும் விசாரித்ததில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், கடந்த 5ஆம் தேதி எலஹங்கா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார், 6 பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
தலைமறைவாக உள்ள மேலும் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.