டெல்லி: டெல்லி பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பல்கலைக்கழகத்தின் கல்விக்குழு (Academic Council) கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிஏ பொலிடிக்கல் சயின்ஸ் ஹானர்ஸ் பட்டப்பிடிப்பில், 5ஆவது செமஸ்டரில் இடம்பெற்றுள்ள 'Understanding Gandhi' என்ற பாடத்துக்கு பதிலாக, சாவர்க்கர் குறித்த பாடத்தை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
மேலும், காந்தியின் பாடத்தை 7ஆவது செமஸ்டருக்கு மாற்றவும், இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஒரு தரப்பு பேராசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கல்வியை காவிமயமாக்க முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டினர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிகாரப்பூர்வ இறுதி முடிவை செயற்குழு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து கல்விக்குழு உறுப்பினர் அலோக் பாண்டே கூறுகையில், "பிஏ பொலிடிக்கல் சயின்ஸ் ஹானர்ஸ் பட்டப்பிடிப்பில் 5ஆவது செமஸ்டரில் காந்தி குறித்த பாடம் உள்ளது. 6ஆவது செமஸ்டரில் சட்ட மேதை அம்பேத்கர் பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளது. தற்போது, சாவர்க்கர் குறித்த புதிய பாடத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
அந்த பாடத்தை கொண்டு வருவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், மகாத்மா காந்தி குறித்த பாடத்தை 7ஆவது செமஸ்டருக்கு மாற்றிவிட்டு, 5ஆவது செமஸ்டரில் சாவர்க்கர் குறித்த பாடத்தை கொண்டு வருவதை தான் எதிர்க்கிறோம். மாணவர்கள் சிலர் 3 ஆண்டு பட்டப்படிப்பை தேர்வு செய்தால், காந்தி பற்றிய பாடத்தை படிக்க முடியாமல் போய்விடும்.
4 ஆண்டுகள் பட்டப்படிப்பை தேர்வு செய்யும் மாணவர்கள் மட்டுமே காந்தியின் பாடத்தை கற்க முடியும். அதற்காகவே தற்போது 5ஆவது செமஸ்டரில் சாவர்க்கர் குறித்த பாடத்தை கொண்டு வர முயற்சிக்கின்றனர். இதே விவகாரம் பல்கலைக்கழகத்தின் நிலைக்குழு (Standing committee) ஆலோசனைக்கு வந்த போதும் எதிர்ப்பு கிளம்பியது. எங்களை பொறுத்தவரை தலைவர்களின் வயது அடிப்படையில் காந்தியின் பாடம் 5ஆவது செமஸ்டரிலும், சாவர்க்கர் பற்றிய பாடம் 6ஆவது செமஸ்டரிலும், அம்பேத்கரின் பாடம் 7ஆவது செமஸ்டரிலும் இடம்பெறலாம்" என்றார்.
இதுகுறித்து பல்கலைக்கழக செயற்குழுவின் முன்னாள் உறுப்பினர் ராஜேஷ் ஜா கூறும்போது, "சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த காந்தியின் கொள்கைகளை மாணவர்கள் முறையாக அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். அவரது சித்தாந்தம் நல்ல அரசியல் மற்றும் ஆளுமையின் பக்கம் நின்றுள்ளது. பட்டப்படிப்பின் தொடக்க செமஸ்டர்களில் மகாத்மா காந்தி குறித்த பாடங்களை மாணவர்கள் கற்கும் போது, சிந்தனையை நன்கு வளர்க்க முடியும். சாவர்க்கருக்கு முன்னதாகவே காந்தியை பற்றி படித்தால், அவரை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள முடியும்" என கூறினார்.
இதையும் படிங்க: சாவர்க்கர் பிறந்தநாள் - புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மரியாதை!