இம்பால் : மணிப்பூரில் புதிதாக நடந்த கலவரத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. வன்முறையில் சிக்கிய இரண்டு பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டு உள்ளது.
இட ஒதுக்கீடு விவகாரத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்து வருகிறது. ஓயாத கலவரத்தால் மாநிலத்தில் மரண ஓலம் கேட்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டு சொந்த வீடுகளை இழந்து முகாம்களில் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மேற்கு இம்பால் மற்றும் கங்போக்பி மாவட்டங்களில் புதிதாக நடந்த கலவரத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கங்சுக் பகுதியில் உள்ள பயேங்க் மற்றும் சிங்டா கிராமங்களில் நீண்ட நேரம் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக பாதுகப்பு படையினர் தெரிவித்து உள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லபட்டதாகவும், இரண்டு பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதலில் கொல்லப்பட்டவர் போலீசார் என தெரிவிக்கப்பட்டது. அவரிடம் போலீசாரின் துப்பாக்கி இருந்ததை கண்டு உயிரிழந்தவர் போலீசார் என கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
பின்னர், கொல்லப்பட்ட நபர் போலீஸ் இல்லை என்றும் காவலர்கள் துப்பாக்கி முனையத்தில் இருந்து .303 துப்பாக்கியை திருடியதாக வழக்கில் தேடப்பட்டவர் என்றும் பாதுகாப்பு படையினர் தெரிவித்து உள்ளனர். உயிரிழந்தவர் சைக்கோம் சிங் என்றும் மேற்கு இம்பால் மாவட்டத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நரோம்தாங் அச்சோம் லெய்கை கிராமத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்ததாக பாதுகாப்பு படையினர் தெரிவித்து உள்ளனர்.
காவல் தடுப்பு படையினரிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டதாகவும், துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்து உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் பள்ளி பகுதியில் பெண் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேற்கு இம்பால் பகுதியில் உள்ள காங்போக்பி மாவட்டத்தில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவம் நடந்த இரண்டு தினங்களுக்கு முன் தான் மணிப்பூரில் 1 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. வன்முறைச் சம்பவங்கள் காரணமாக ஏறத்தாழ இரண்டு மாதங்கள் பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நிலையில், பள்ளிகளை திறக்க முதலமைச்சர் பிரேன் சிங் உத்தரவிட்டு இருந்தார்.
பள்ளிக்கு அருகே ஏதோ வேலை காரணமாக பெண் சென்றதாகவும் அவருக்கும் பள்ளிக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் பெண் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்திலும் பேரணியிலும் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க : டெல்லி அவசர சட்டம்: இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு... ஆம் ஆத்மி அரசுக்கு பின்னடைவு!