டெல்லி: மூத்தப் பத்திரிகையாளர் பட்ரிசியா முகிம் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யப்பட்டது.
மூத்தப் பத்திரிகையாளர் பட்ரிசியா முகிம், “மேகாலயாவில் பழங்குடியினர் அல்லாதோரையும் பாதுகாக்க வேண்டும், அவர்களின் சமத்துவத்துக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என்று சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். இந்தப் கருத்து இருதரப்பினர் இடையே வெறுக்கதக்க வகையில் இருப்பதாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் முகிம் கைது செய்யப்பட்டார். இவர் தன் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ், எஸ். ரவீந்திர பட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறுகையில், “அரசாங்கத்தின் செயலற்ற தன்மையை வெளிக்கொணர்வதை, இரு சமூகங்களிடையே வெறுப்பை வளர்க்கும் முயற்சி என்று முத்திரை குத்த முடியாது. ஒவ்வொரு குடிமகன்களின் சுதந்திரமான பேச்சு, பொது ஒழுங்கை பாதிக்கும் போக்கைக் கொண்டிருக்கவில்லை எனில் அவர் குற்றவியல் வழக்குகளில் சிக்கியிருந்தாலும் அவர்களைத் தடுக்க முடியாது.
இந்தியா ஒரு பன்மை மற்றும் பன்முக கலாசார சமூகம், இதுவே நமது அரசியலமைப்பு முன்னுரையில் விவரிக்கப்பட்டுள்ள சுதந்திரத்தின் வாக்குறுதி. அதில் ஒவ்வொரு குடிமகனின் உரிமைகளையும் கோடிட்டுக் காட்டும் பல்வேறு விதிகள் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில், சுதந்திரமாக பேசவும், சுதந்திரமாக பயணிக்கவும், நாட்டின் அனைத்து பகுதிகளில் குடியேறவும் உரிமை உண்டு.
இந்நிலையில், சில சமயங்களில், அத்தகைய உரிமையை முறையாகப் பயன்படுத்தாதபோது, தனிநபர்கள் இடையே மனக்கசப்பு, விரோதம் அல்லது வன்முறைக்கு வழிவகுக்கும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் அதிருப்தியை குரலாக கொடுத்தால், பேசினால், குறிப்பாக மாநில அலுவலர்கள் கண்மூடித்தனமாக நடத்தல் கூடாது.
நீதி மறுக்கப்படும் சமயத்தில், குரல் கொடுப்பது உண்மையில் வேதனையின் அழுகை. அவ்வாறே இந்த விஷயத்திலும் நடந்ததாகத் தெரிகிறது” என்றனர். இதையடுத்து மூத்தப் பத்திரிகையாளர் பட்ரிசியா முகிம் மீதான வழக்கை தள்ளுபடி செய்தனர். பட்ரிசியா முகிம் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153ஏ-ன் படி மதம், இனம் ஆகியவற்றின் அடிப்படையில் இரு குழுக்கள் இடையே பகைமையை உருவாக்குதல் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது நினைவு கூரத்தக்கது.