ஐதராபாத் : ஷாப்பிங் மாலில் உள்ள விளையாட்டு இயந்திரத்தில் சிறுமி கை சிக்கியதில் 3 விரல்கள் துண்டிக்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் சிட்டி சென்டர் மால் அமைந்து உள்ளது. இந்த மாலில் சிறுவர், சிறுமியர் விளையாடுவதற்கு என தனியாக கூடம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மாலுக்கு பஞ்சாரா ஹில்ஸ் இப்ராகிம் நகரைச் சேர்ந்த மேத்தா ஜஹான் அவரது மனைவி மஹியா பேகம் மற்றும் மூன்று வயது குழந்தையும் சென்று உள்ளார்.
மாலின் நான்காவது மாடியில் உள்ள SMASH Zone என்ற கேமிங் சென்டருக்கு குழந்தையுடன் சென்ற மேத்தா ஜஹான், அங்கிருந்த விளையாட்டு பொருட்களை கொண்டு குழந்தையுடன் விளையாடிக் கொண்டு இருந்து உள்ளார். அப்போது விளையாட்டு இயந்திரத்தில் 3 வயது சிறுமியின் கை சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதில் சிறுமியின் மூன்று விரல்கள் இயந்திரத்தில் சிக்கி நசுங்கியதாக சொல்லப்படுகிறது. வலியால் துடித்த சிறுமியை மீட்ட பெற்றோர் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிறுமியை அனுமதித்து உள்ளனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது 3 கை விரல்கள் மிக மோசமான அளவில் சேதமடைந்ததாவும், மீண்டும் விரல்களை கையில் பொறுத்த முடியாது என்றும் தெரிவித்து உள்ளனர்.
இதையடுத்து சிறுமியின் வலது கையில் சேதமடைந்த மூன்று விரல்களை மருத்துவர்கள் துண்டித்தனர். தொடர்ந்து சிறுமிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து குழந்தையின் தந்தை மேத்தா ஜஹான் பஞ்சாரா ஹில்ஸ் போலீசில் புகார் அளித்து உள்ளார்.
அந்த புகாரில் சம்பவத்தின் போது, மால் நிர்வாகமும், SMASH Zone ஊழியர்களும் அலட்சியமாக செயல்பட்டதாகவும் விபத்து நடந்த பிறகும், கேமிங் சோனில் விளையாடிக் கொண்டு இருந்த குழந்தைகளை கவனிக்க ஊழியர்கள் முன்வரவில்லை என்றும் தெரிவித்து உள்ளார். மேலுன் இந்த சம்பவம் பாதுகாப்பு அலட்சியம், போதிய முன்னெச்சரிக்கை இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் நடந்தவை என்றும் சிறுமியின் தந்தை போலீசில் அளித்த புகாரில் தெரிவித்து உள்ளார்.
மேலும் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமிராக்களை மால் நிர்வாகத்தினர் அகற்றியதாக கூறப்படுகிறது. விபத்து குறித்து விசாரணை நடத்த சென்ற போதும், சம்பந்தப்பட்ட இடத்தில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்படவில்லை என மால் ஊழியர்கள் தெரிவிக்கத்ததாக கூறப்பட்டு உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விளையாட்டு இயந்திரத்தில் சிக்கி 3 வயது சிறுமியின் விரல்கள் சேதமடைந்து, முற்றிலும் துண்டிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் - விவசாய சங்கங்கள் ஆதரவு!