கர்னல் (ஹரியானா) : ஹரியானாவில் காரில் பயங்கர ஆயுதங்கள், வெடிபொருள்களுடன் சென்றுகொண்டிருந்தவர்களை பஸ்தாரா சுங்கச்சாவடி அருகில் காவல்துறையினர் சுற்றிவளைத்து இன்று (மே 5) கைது செய்தனர்.
இதுகுறித்து கர்னல் மாவட்ட எஸ்பி ராம் பூனியா கூறுகையில், "சட்டவிரோதமாக ஆயுதங்கள், வெடிபொருள்கள் எடுத்துச் செல்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வாகனம் அடையாளம் காணப்பட்டு, பஸ்தாரா சுங்கச்சாவடி அருகில் காரில் இருந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து துப்பாக்கி, வெடி பொருள்கள், 1.3 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் மூன்று பேர் பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரைச் சேர்ந்தவர்கள், மற்றொருவர் லூதியானாவைச் சேர்ந்தவர். அவர்கள் குர்பிரீத், அமந்தீப், பர்மிந்தர் மற்றும் பூபிந்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்" என்றார்.
தொடர்ந்து கூறுகையில், "கைது செய்யப்பட்டவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுவருபவருடன் தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் அந்த நபர், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை தெலுங்கானாவின் அடிலாபாத்தில் விட்டுச்செல்லுமாறு கூறியுள்ளார். குற்றஞ்சாட்டப்பட்டுள்ள குர்பிரீத் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் ட்ரோன் பயன்படுத்தி வெடிபொருட்கள் பெற்று வந்ததும் தெரியவந்துள்ளது" என்றார். பாகிஸ்தானைச் சேர்ந்த ஹர்விந்தர் சிங் என்பவர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுவருவதாகவும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, கைதுசெய்யப்பட்ட நான்கு பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: குஜராத்தில் ஆயுதங்கள் பதுக்கிய 10 பேர் கைது