லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவம் தேவ்கலி கிராமத்தில் நடந்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் அதே பகுதியில் காய்கறி கடை நடத்திவந்த இந்திரா பகதூர் (42), அவரது மனைவி சுசீலா தேவி (38), மகள் சாந்தினி (10), மகன் ஆர்யன் (8) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீசார் தரப்பில், இந்திரா பகதூர் வீட்டிலிருந்து புகை வெளியேறுவதை கண்ட அக்கம் பக்கத்தினர் கதவை தட்டியுள்ளனர். யாரும் திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, 4 பேரும் தீயில் கருகிய நிலையில் கிடந்துள்ளனர். அதன்பின் எங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதனடிப்படையில் நாங்கள் சம்பவயிடத்துக்கு விரைந்து உடல்களை மீட்டு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தோம். முதல்கட்ட விசாரணையில், இந்திரா பகதூருக்கும், சுசீலா தேவிக்கும் வாங்கிய கடன் தொடர்பாக அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுவந்துள்ளது. இந்த நிலையிலேயே இந்திரா பகதூர் இன்று (பிப்.5) மனைவி சுசீலா தேவி, மகள் சாந்தினி, மகன் ஆர்யன் ஆகியோர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டு, அதன்பின் தானும் தீயிட்டு கொண்டு உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
அதேபோல இவர் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இந்த சம்பவம் கடன் தொல்லையால் ஏற்பட்டதா அல்லது குடும்பத்தகராறு காரணமாக ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்திவருகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: மேற்கு வங்கத்தில் குண்டு வெடிப்பு.. திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் உயிரிழப்பு.. மற்றொருவர் படுகாயம்..