மேகாலயா: மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சியின் ஆட்சி நடக்கிறது. மேகாலயாவுக்கு 2023ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், அம்மாநிலத்தில் ஆளும் தேசிய மக்கள் கட்சியின் இரண்டு எம்எல்ஏக்கள் உள்பட நான்கு எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த பெனடிக் மரக் மற்றும் ஃபெர்லின் சங்மா, திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த ஹிமாலயா முக்தன் ஷாங்ப்லியாங், சுயேச்சை எம்எல்ஏவான சாமுவேல் எம்.சங்மா ஆகிய நான்கு பேரும், டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்ளிட்டோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
எம்எல்ஏக்கள் இணைந்தது பாஜவில் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சி என அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, "மேகாலயா போன்ற மாநிலத்தைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தது பெரிய விஷயம். அங்கு கடந்த தேர்தலில் 2 இடங்களை மட்டுமே நாங்கள் பெற்றிருந்தோம். ஆனால், இந்த முறை மேகாலயாவில் நாங்கள் ஆட்சி அமைப்பதில் உறுதியாக இருக்கிறோம். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் செய்து வருகிறோம். மேகாலயாவைத் தவிர, திரிபுரா மற்றும் நாகாலாந்து சட்டப்பேரவை தேர்தல்களிலும் பாஜக வெற்றி பெறும்" என்றார்.