மேற்குவங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முன்னாள் ரயில்வே துறை அமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான தினேஷ் திரிவேதி பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து, தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பிப்ரவரி 12ஆம் தேதி அவர் ராஜினாமா செய்தார். இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோரின் முன்னிலையில் திரிவேதி இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய திரிவேதி, "இந்த சிறப்புமிக்க தருணத்திற்காகதான் காத்துக் கொண்டிருந்தேன். மேற்குவங்கத்தில் வன்முறை ஊழல், பயங்கரவாதம் ஆகியவை நிலவிவருகிறது. கலாசாரத்தின் புகலிடமான வங்கம்தான் எங்களுக்கு பெருமை. உண்மையான மாற்றத்தை நினைத்து மேற்குவங்க மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்" என தெரிவித்தார்.
திரிவேதி குறித்து பேசிய நட்டா, "திரிவேதிக்கு அரசியலில் நீண்ட கால அனுபவம் உண்டு. கொள்கைக்கான பாதையில் பயணித்த அவர், அதிகாரத்தை தள்ளிவைத்துவிட்டு அதற்காக போராடினார். அவர் பாயும் நதி போன்றவர். பல கொள்கைகளை கொண்டவர்களை பாஜகவால் மட்டும்தான் இணைக்க முடியும்" என்றார்.