புவனேஸ்வர்: தமிழகத்தில் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியன். இவர் 2000 பேட்ச் அதிகாரியான இவர், 2002 முதல் 2004 வரை, ஒடிசாவின் கலஹண்டி மாவட்டத்தில் துணை ஆட்சியராக தனது பணியைத் தொடங்கினார்.
2005 முதல் 2007 வரை மயூர்பஞ்ச் மாவட்டத்தின் ஆட்சியராக பணியாற்றினார். 2007 முதல் 2011 வரை கஞ்சம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார். வி.கே.பாண்டியன் மாவட்ட ஆட்சியராக இருந்த காலகட்டத்தில் கஞ்சம் மாவட்ட மக்களுக்காக பல திட்டங்களை செயல்படுத்தினார். இவரது காலத்தில் கஞ்சம் மாவட்டம் 4 முறை தேசிய விருதையும் வென்றிருந்தது.
பின்னர் வி.கே.பாண்டியன் 2011ஆம் ஆண்டு மே 2 முதல் ஒடிசா மாநிலத்தின் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராகப் பணியாற்றி வந்தார். 2019ஆம் ஆண்டு 5T செயலாளராக பொறுப்பேற்றார். இவர் 5T செயலாளராக பணியாற்றிய போது நவீன் பட்நாயக்கிற்கு பதிலாக இவர் தான் ஆட்சி நடத்துவதாகவும், விரைவிலேயே பிஜூ ஜனதா தளத்தில் இணைந்து விடுவார் எனவும் விமர்சிக்கப்பட்டு வந்தது.
ஐஏஎஸ் அதிகாரியாக 23 ஆண்டுகள் பணியாற்றிய வி.கே.பாண்டியன் கடந்த அக்டோபர் மாதம் ஐஏஎஸ் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெறுவதற்காக விண்ணப்பித்தார். வி.கே.பாண்டியன் அக்டோபர் 24ஆம் தேதி விருப்ப ஓய்வு பெற்ற நிலையில் 5T மற்றும் நவீன் ஒடிசாவின் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று (நவ.27) வி.கே.பாண்டியன் ஒடிசா மாநில முதலமைச்சரும், பிஜூ ஜனதா தளம் தலைவருமான நவீன் பட்நாயக் முன்னிலையில் கட்சியில் சேர்ந்தார்.
பாண்டியன் கட்சியில் சேர்வதற்கு முன் நவீனின் இல்லத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. நவீவின் நிவாஸில் வைத்து கட்சியில் சேர்ந்த வி.கே.பாண்டியன், நவீனின் இல்லத்தில் இருந்து, ஷங்க் பவனுக்கும், பின்னர் கஞ்சம் தேவி மா தாராதாரிணி கோயிலுக்கும் செல்லவுள்ளார்.
வி.கே.பாண்டியனின் மனைவி சுஜாதா ரௌத் கார்த்திகேயன் ஒடிசாவின் கேந்திரபாராவை சேர்ந்தவர். அவர் மிஷன் சக்தி துறையின் செயலாளராக உள்ளார். மேலும் அவர் ஒடியா மொழி, இலக்கியம் மற்றும் கலாச்சாரத் துறையின் செயலாளராக கூடுதல் பொறுப்பை வகிக்கிறார். பிஜூ ஜனதா தளத்தில் இணைந்த பின்னர் வி.கே.பாண்டியன் கட்சிக்கு மேலும் பலம் சேர்க்க பாடுபடுவேன் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 16வது நாளாக தொடரும் மீட்பு பணி.. உத்தரகாண்ட் சுரங்கத்தில் நடப்பது என்ன?