பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. ஆட்சியமைக்க 59 இடங்கள் தேவை என்ற நிலையில், ஆம் ஆத்மி கட்சி தனிபெரும்பான்மையுடன் 92 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆளும் காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சியை இழக்கும் நிலை உள்ளது.
இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி 'பஞ்சாப் லோக் காங்கிரஸ்' எனத் தனிக்கட்சி தொடங்கி, பாட்டியாலா தொகுதியில் களம் கண்ட கேப்டன் அம்ரீந்தர் சிங் ஆம் ஆத்மி வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.
இரண்டு முறை முதலமைச்சராக இருந்தவர், ஆம் ஆத்மி வேட்பாளர் அஜித் பால் சிங் கோலியிடம் தோல்வியைத் தழுவினார். அம்ரீந்தர் சிங் , பாஜக கூட்டணியில் தனது கட்சியான பஞ்சாப் லோக் காங்கிரஸில் களம் கண்டார்.
பஞ்சாப்பில் முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க உள்ளது. இரண்டு தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
இதையும் படிங்க: பஞ்சாப் அரசியல் ஜம்பவான்களை துடைத்தெடுத்த ஆம் ஆத்மியின் துடைப்பம்!!!