அஸ்ஸாம் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான தருண் கோகாய் கரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, கரோனாவிலிருந்து மீண்ட அவர் வீடு திரும்பினார். இதையடுத்து, உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் இரண்டாவது முறையாக நவம்பர் 1ஆம் தேதி, கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. முன்னதாக, 9 மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் வீட்டிலேயே தங்க வைக்கப்பட்டிருந்தார். செயற்கை சுவாச கருவிகளின் உதவியோடு தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா மருத்துவமனைக்கு சென்று அவரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
இதுகுறித்து ஹிமாந்த பிஸ்வா சர்மா கூறுகையில், "செயற்கை சுவாச கருவிகளின் உதவியோடு தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அடுத்த 48 மணி நேரம் மிகவும் இக்கட்டானதாக இருக்கும். சுயநினைவை இழந்துள்ளார். அவரது பல்வேறு உறுப்புகள் செயலிழந்துள்ளது. அதற்கு ஏற்ப, அவருக்கு அதிகப்படியான மருந்துகள் அளிக்கப்பட்டுவருகிறது" என்றார்.