புதுக்கோட்டை: அதிமுக ஓபிஎஸ் அணி வடக்கு மாவட்ட அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் அதிமுக ஓபிஎஸ் அணி வடக்கு மாவட்டச்செயலாளர் ராஜசேகரன், அதிமுக ஓபிஎஸ் அணியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டு கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வைத்திலிங்கம், 'அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரும் விரைவில் ஒன்று சேர்வோம். ஓபிஎஸ், பண்ருட்டி ராமச்சந்திரன் முதல் சசிகலா, எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் வரை அனைவரும் ஒன்றிணைவார்கள்’ என வைத்திலிங்கம் கூறினார்.
ஒன்றிணைய எடப்பாடி பழனிசாமி மறுத்தால் தனித்து விடப்படுவார் என்றும்; அது கூடிய விரைவில் நடக்கும் என்றும் கூறினார். கட்சி பிரச்னையில் பாஜக தலையீடு இல்லை என்று கூறிய வைத்திலிங்கம், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ரெய்டுகள் ஏற்கெனவே வந்தது தான் என்றும்; தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் கட்சிக்கும் சம்பந்தம் கிடையாது என்றார்.
நாடாளுமன்றத் தேர்தலை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் சந்திக்கும் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும்; ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் இருப்பார் என்றும் வைத்திலிங்கம் குறிப்பிட்டார்.
ஆறுமுகசாமி விசாரணை அறிக்கையில் ஒருசில கருத்துகள் முரண்பாடாக உள்ளதாகவும், தமிழ்நாடு அரசு அறிக்கை மீது என்ன நடவடிக்கை எடுக்க இருக்கிறது என்பதை அறிந்து அதன் பின் கருத்துகளை வெளியிடுவதாகவும் கூறினார்.
கோவை மாவட்டத்தை 4 மாவட்டங்களாக அதிமுக ஓபிஎஸ் அணி இணைத்துள்ளது, அதன் அடிப்படையில் தான் கோவை செல்வராஜ் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்; அவர் எதற்காக தன்னை கட்சியிலிருந்து விடுவித்துக்கொண்டார் என்பது தங்களுக்கு தெரியவில்லை என்றும் மீண்டும் அவரை ஒன்றிணைப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதே தவிர இதுவரை சார்ஜ் சீட் பதிவு செய்யப்படவில்லை; எனவே ஒரு உடன்பாட்டில் திமுகவின் பி டீம் போல் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார் என்றார்.
’ஆளுநருக்கு என்று சட்ட திட்டம் என்ன உள்ளதோ அதன்படி தான் ஆளுநர் நடந்து வருகிறார். அப்படித்தான் நடக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். ஓபிஎஸ் அணியின் பொதுக்குழு கூட்டம் விரைவில் நடக்கும். அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்’ என்றார்
இதையும் படிங்க: பாஜகவிடம் இருந்து எதிர்க்கட்சி இடத்தைப் பாதுகாக்க ஈபிஎஸ் முயற்சி.. பின்னணி இதுதான்!