விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், நடிகை டாப்ஸி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். மோடி அரசை விமர்சித்ததன் காரணமாகவே அவர்களின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுவருவதாக பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டினர்.
இந்த குற்றச்சாட்டிற்கு, பதில் அளித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2013ஆம் ஆண்டு இது போன்ற சோதனைகள் நடைபெற்றபோது, யாரும் கேள்வி எழுப்பவில்லையே என பதில் கேள்வி எழுப்பினார்.
டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், இதுகுறித்து கூறுகையில், "முந்தைய அரசுகளின் ஆட்சிக்காலத்தில் அதே நபர்களின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டப்போது இதனை பிரச்னையாக எழுப்பவில்லை. ஆனால், தற்போது இது விவகாரமாக எழுப்பப்படுகிறது" என்றார்.
மும்பையிலுள்ள பாண்டம் பிலிம் ஜோகேஸ்வரி அலுவலகம், ஓஷிவாரா பகுதியிலுள்ள இயக்குநர் அனுராக் காஷ்யப் வசிக்கும் வீடு, கோரேகான் பகுதியில் உள்ள நடிகை டாப்ஸி பன்னு வசிக்கும் வீடு ஆகியவைகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.