மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் வாத்வான் கிராமத்தில் வசிக்கும் மீனவர் பிரமோத் டால்வி, நீலக் கடலுக்குள் சுதந்திரமாக உலவித் திரிந்த மீன்களை தனது வலையில் சிக்க வைக்க லாவகமாக வலைகளை விரித்தார். சின்னதும் பெரியதுமாக வலை நிறைய மீன்கள் அகப்படவே வலுவாக வலையைப் படகிற்கு இழுத்திருக்கிறார்.
வலையில் மற்ற மீன்களோடு கலந்து துடித்துக் கொண்டிருந்த புதிய வகை மீனொன்றைக் கண்டு வியப்படைந்த பிரமோத், அதை உற்று கவனித்தார். மயில் மேனியின் வண்ணத்தை தன் மீது பூசியிருந்த ஒரு மீன் தனது நீண்ட துடுப்புகளால் படபடத்துக் கொண்டிருந்தது.
பறவையின் சிறகுகளைப் போலயிருந்த அதன் துடுப்புகள் பிரமோத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதிசயமாக தான் கண்டு வியந்து கொண்டிருந்த பறக்கும் மீனைக் கடைகளில் விற்க மனமில்லாத பிரமோத், அதனைத் தன்னோடு வீட்டிற்கு எடுத்து வந்தார்.
வாத்வான் கிராமத்தில் பறக்கும் மீனைக் குறித்து இதுவரை யாரும் கேள்விப்பட்டதில்லை. முதல் முதலாக பிரமோத் அதை தனது வீட்டிற்கு எடுத்து வந்தது காட்டுத் தீயாக கிராமம் முழுவதும் பரவியது. அது என்ன பறக்கும் மீன்? றெக்க இருக்குமா? பறக்குமா? என பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விவாதத்தில் ஈடுபட்டதுடன் அதனைக் காணும் ஆர்வத்தில் பிரமோத் வீட்டிற்கு படையெடுத்தனர். இப்போது வாத்வான் கிராமத்து திண்ணைகளில் பறக்கும் மீன் தான் ஹாட் டாபிக்.
பறக்கும் மீன்
பறக்கும் மீன் எக்ஸோகோடிடே குடும்பத்தைச் சேர்ந்தது என ஆய்வாளர்கள் வகைப்படுத்துகின்றனர். கடல்களில் வசிக்கும் இவற்றில் 9 இனங்கள், 64 வகைகள் உள்ளன. வெப்ப மண்டல பகுதிகளில் உள்ள கடல்களில் இந்த மீன்கள் காணப்படுகின்றன.
அட்லாண்டிக், பசிபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடலில் அதிகமாகக் காணப்படுகின்றன. ஆழ்கடலில் வசிக்கும் இவை அரிதாகவே கரைக்கு வருகின்றன. இறால், மீன் முட்டைகள் தான் இவற்றிற்கு உணவு. ஆண்டு முழுவது இதற்கு இனப்பெருக்க காலம் தான் என்றாலும், மார்ச் முதல் ஜூன் வரையிலான காலங்களில் அதிகளவில் இனப்பெருக்கம் நடைபெறும்.
உடலமைப்பும் வேகமும்
பறக்கும் மீனுக்கு பரந்த மார்பு துடுப்புகளிருக்கும். பறவைகளின் இறக்கை காற்றை கிழித்துக் கொண்டு செல்வது போல, இந்த மீன் தனது முன்துடுப்புகள் மூலம் பறக்கின்றன.
கடலில் அலைகள் அதிகமாக இருக்கும் சமயங்களில், இவை கடலின் மட்டத்திலிருந்து மேலே எகிறி குதித்து காற்றில் சில அடி தூரம் வரை பறந்து சென்று மீண்டும் கடலில் குதித்து விளையாடுகிறது. இதனாலேயே இவற்றிற்கு பறக்கும் மீன் என்ற பெயர் வந்தது.
மார்புக்கு மிக அருகில் கீழ் இறக்கைகள் அமைந்திருக்கும் இந்த மீன், 14 முதல் 45 செ.மீ நீளம் உடையது. மிகவும் மெல்லிய மேல் இறக்கையைக் (துடுப்பு) கொண்டிருக்கும் இந்த மீனால் ஒரே பாய்ச்சலில் 50 முதல் 400 மீ தூரத்தைக் கடக்க முடியுமாம்.
மணிக்கு 70 கி.மீ வேகத்தில் பறக்கும்; அதிகபட்சமாக 6 மீ உயரத்தில் தாவுமாம். ஒரு விநாடிக்கு 70 முறை இதன் வாலை அசைத்து அந்தரத்தில் ஒரு வித சமநிலையுடன் பறக்கிறது. பெரும்பாலும், இரை தேடும் போதும், வலையில் சிக்காமல் தப்பிக்கவும் பறக்கின்றன.
பறக்கும் மீன்களைக் கடல் பறவைகளும், டால்பின்கள் மற்றும் சில வகை மீன் வகைகளும் விரும்பிச் சாப்பிடுகின்றன.